ஒரு பிரச்சினைக்கு ஒரே மாதிரியான தீர்வைத் தொடர்ந்து தேடுகிறோமா? அல்லது எல்லா சூழ்நிலைகளையும் ஒரே பார்வையில் அணுகுகிறோமா? அப்படியானால், நம்முடைய சிந்தனை எல்லைக்குள் சிக்கியிருக்கலாம். இதைத் தவிர்க்க உதவும் முக்கியமான அணுகுமுறையே ‘மென்டல் மாடல்’ (Mental Model). உலகைப் புரிந்துகொள்வதற்கும், சரியான முடிவுகளை எடுப்பதற்கும், புதிய கோணங்களில் சிந்திப்பதற்கும் உதவும் மனப்பாங்காக இது கருதப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள அடிப்படைக் கருத்துகளை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் சிந்தனைத் திறனை மேம்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மென்டல் மாடல் என்றால் என்ன?
மென்டல் மாடல் என்பது ஒரு விஷயம் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் மனக் கட்டமைப்பு அல்லது சிந்தனை வடிவம். ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவும், காரணம்-விளைவை ஆராயவும், முடிவுகளை மதிப்பிடவும் இது உதவுகிறது.
உதாரணமாக, பொருளாதாரத்தில் ‘தேவை மற்றும் வழங்கல்’, உளவியலில் ‘ஊக்குவிப்பு’, அறிவியலில் ‘என்ட்ரோபி’ போன்ற அடிப்படைக் கருத்துகள் அனைத்தும் மென்டல் மாடல்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை வாழ்க்கையின் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தும்போது, சிக்கலான பிரச்சினைகளையும் தெளிவாக அணுக முடியும்.
ஒரே பார்வை ஏன் போதாது?
ஒரே துறையில் அதிக அனுபவம் பெற்றவர்கள் கூட, எல்லா பிரச்சினைகளையும் தங்களுக்குத் தெரிந்த ஒரே கோணத்தில் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகலாம். ஆபிரகாம் மாஸ்லோ சொன்னதை போல, “கையில் சுத்தியல் மட்டுமே இருந்தால், எல்லாமே ஆணியாகத் தோன்றும்” என்ற பழமொழி இதைத் துல்லியமாக விளக்குகிறது.
உதாரணமாக, ஒரு கோழி சாலையைக் கடந்ததற்கு பரிணாம உயிரியல் நிபுணர் ஒரு காரணத்தையும், நரம்பியல் நிபுணர் வேறு காரணத்தையும், உடலியல் நிபுணர் இன்னொரு காரணத்தையும் கூறலாம். ஒவ்வொரு விளக்கத்திலும் உண்மை இருந்தாலும், முழுப் படத்தைப் புரிந்துகொள்ள பல கோணங்கள் தேவைப்படும்.
சிந்தனைத் திறனை வளர்ப்பது எப்படி?
புதிய மென்டல் மாடல்களை உருவாக்க, ஒரே துறையை மட்டும் படிப்பதற்குப் பதிலாக பொருளாதாரம், வரலாறு, உளவியல், அறிவியல், தத்துவம் போன்ற பல துறைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு அனுபவங்கள் கொண்டவர்களுடன் உரையாடுவதும், பலவகை புத்தகங்களை வாசிப்பதும் சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்தும்.
படைப்பாற்றல் மற்றும் புதுமையான யோசனைகள் பெரும்பாலும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் சந்திக்கும் இடத்தில்தான் உருவாகின்றன. எனவே, பல துறைகளில் இருந்து கிடைக்கும் அறிவை இணைத்து சிந்திக்கும் பழக்கம், சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
சரியான கருவிகள் இருந்தால் சிந்தனையும் மாறும்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே தீர்வு இருக்காது. அதுபோல, வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளையும் ஒரே சிந்தனை முறையால் புரிந்துகொள்ளவும் முடியாது. பல்வேறு மென்டல் மாடல்களை கற்றுக்கொள்வதன் மூலம், பிரச்சினைகளை ஆழமாக ஆராயவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், புதிய வாய்ப்புகளை கண்டறியவும் முடியும். சிந்தனைக்கு பல கருவிகள் இருந்தால், வாழ்க்கையின் பல சவால்களையும் தெளிவாக எதிர்கொள்ள முடியும்.
Source: https://medium.com/the-mission/mental-models-how-to-train-your-brain-to-think-in-new-ways-ad538ca9052c
