கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக உடல் வியர்வை மூலம் அதிகளவு நீரையும், தாதுச் சத்துகளையும் இழக்கிறது. இதனால் சோர்வு, தலைச்சுற்றல், வாய்வறட்சி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது; நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்திருப்பதோடு, ஆற்றலையும் பராமரிக்க உதவும் சில உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் – கோடையின் இயற்கை குளிரூட்டிகள்
தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், உடனடி ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இதைச் சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாகவும் அருந்தலாம்.
அதேபோல், வெள்ளரிக்காய் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. சாலட், ரைட்டா அல்லது தண்ணீரில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து குடிப்பதன் மூலமும் இதன் நன்மைகளைப் பெறலாம்.
இளநீர் மற்றும் ஆரஞ்சு ஏன் முக்கியம்?
இளநீர் இயற்கையான எலக்ட்ரோலைட் பானமாகக் கருதப்படுகிறது. வியர்வை மூலம் இழக்கும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களை ஈடுசெய்து, உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க இது உதவுகிறது. வெளியில் அதிக நேரம் செலவிடுபவர்கள் இளநீர் குடிப்பது நல்லது.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களும் உடலுக்கு நீர்ச்சத்தையும், வைட்டமின் சி சத்தையும் வழங்குகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வெப்பத்தால் ஏற்படும் சோர்வையும் குறைக்க உதவுகின்றன.
தயிரை மறக்காதீர்கள்
கோடை காலத்தில் பலர் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம். தயிர் நேரடியாக நீர்ச்சத்தை வழங்குவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக வெப்பத்தால் பசி குறையும் நேரங்களில், தயிர் உடலை இலகுவாக வைத்திருக்க உதவுகிறது.
நீர்ச்சத்து பெற உணவுமுறையும் முக்கியம்
நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய், காரம் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. தாகம் அதிகரித்தல், அடர்நிற சிறுநீர், சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக நீர்ச்சத்தை ஈடுசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கோடையில் சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க முடியும்.
