மீண்டும் ஒரு மகுடம்: 4-வது முறையாக தேசிய விருது வென்ற மம்முட்டி! ‘மதிலுகள்’ முதல் ‘பிரமயுகம்’ வரை ரீவைண்ட்!

Published On:

| By Mathi

Mammootty Wins His 4th National Award! A Rewind from 'Mathilukal' to 'Bramayugam'!

2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று ஜூலை 18-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தமிழில் ராயன், அமரன், மெய்யழகன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களுக்கு மொத்தம் 9 விருதுகள் கிடைத்துள்ளன.

மலையாளத்தில் மம்முட்டி (Mammootty) நடித்த பிரமயுகம் திரைப்படத்துக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பிரமயுகம் படத்துக்காக சிறந்த நடிகர் விருது மம்முட்டி-க்கும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ஷெஹ்னாத் ஜலாலுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமயுகம்

இந்தத் திரைப்படம் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவின் தெற்கு மலபார் வனப்பகுதியில் நடக்கும் ஒரு மர்மமான திகில் கதையாகும். பாணர் குலத்தைச் சேர்ந்த ‘தேவன்’ (அர்ஜுன் அசோகன்) என்ற இளைஞன், அடிமை முறையிலிருந்து தப்பிக்க முயலும்போது வழிதவறி காடு வழியாகச் செல்கிறான். பசியாலும் களைப்பாலும் அவதிப்படும் அவன், காட்டுக்கு நடுவே இருக்கும் ஒரு சிதிலமடைந்த பழமையான பெரிய வீட்டிற்குள் தஞ்சம் புகுகிறான்.

ADVERTISEMENT

அந்த வீட்டில் ‘கொடுமன் பொட்டி’ (மம்மூட்டி) என்ற உயர்சாதி நம்பூதிரியும், ஒரு சமையல்காரரும் (சித்தார்த் பரதன்) வசித்து வருகின்றனர். தேவனின் இசைத் திறமையால் ஈர்க்கப்பட்ட கொடுமன் பொட்டி, அவனை அந்த வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கிறார்.

தேவன் அந்த வீட்டிற்குள் நுழைந்த பிறகு, அங்கு நடக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளைக் கண்டு அச்சமடைகிறான். சமையல்காரர் தேவனிடம், “கொடுமன் பொட்டியை நம்பாதே, உள்ளே வந்த யாரும் மீண்டும் வெளியே சென்றதில்லை” என்று எச்சரிக்கிறார்.

ADVERTISEMENT

கொடுமன் பொட்டியின் பிடியில் சிக்கிக்கொள்ளும் தேவன், அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அந்த வீடு ஏன் சபிக்கப்பட்டது? கொடுமன் பொட்டி யார்? அந்த வீட்டிற்குள் நடக்கும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? இறுதியில் தேவன் அங்கிருந்து தப்பினானா இல்லையா என்பதே படத்தின் கதை.

படம் முழுவதும் கறுப்பு-வெள்ளையில் (Black and White) படமாக்கப்பட்டது. இது படத்தின் திகில் உணர்வை மேலும் வலுப்படுத்தியது. மம்மூட்டி ‘கொடுமன் பொட்டி’ கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான மற்றும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அர்ஜுன் அசோகன் மற்றும் சித்தார்த் பரதன் ஆகியோரின் நடிப்பும் கதைக்கு வலு சேர்த்தது.

சாதிய ஒடுக்குமுறை, அதிகாரம், மாந்திரீகம் மற்றும் தொன்மக் கதைகளை மையமாக வைத்து, ஒரு த்ரில்லர் அனுபவத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் தந்திருந்தார்.

தேசிய விருது வென்ற மம்முட்டியின் (Mammootty) படங்கள்

மம்முட்டிக்கு இது 4-வது தேசிய விருது. இதற்கு முன்னதாக 1989, 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் நடித்த மொத்தம் 6 திரைப்படங்களுக்காக அவர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்

1989-ம் ஆண்டில்,

  • மதிலுகள் (Mathilukal) – வைக்கம் முகமது பஷீரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்
  • ஒரு வடக்கன் வீரகதா (Oru Vadakkan Veeragatha) – வரலாற்றுப் பின்னணி கொண்ட காவியப் படம் ஆகியவற்றுக்காக மம்முட்டிக்கு வழங்கப்பட்டது.

1993-ல்

  • பொந்தன் மாடா (Ponthan Mada) நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம். ‘மாடா’ என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபருக்கும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவருக்கும் இடையே மலரும் விசித்திரமான நட்பே கதையின் மையம்.
  • விதேயன் (Vidheyan).. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் சக்கரியா எழுதிய கதையை மையமாகக் கொண்டது. அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நிலப்பிரபு (பாஸ்கர பட்டேலர்) மற்றும் அவனுக்கு அடிபணிந்து நடக்கும் ஒரு ஏழை ஊழியன் (தோமா) ஆகியோருக்கு இடையிலான உளவியல் ரீதியான மோதல்தான் இப்படத்தின் கதை.

இதில் மம்மூட்டி ‘பாஸ்கர பட்டேலர்’ என்ற கொடுங்கோல் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அதிகார மமதை, குரூரம் மற்றும் ஒருவிதமான மனப்பிறழ்வு கொண்ட அந்த கதாபாத்திரத்தை, வசனங்கள் மூலமாக மட்டுமன்றி, உடல் மொழியாலும் மம்மூட்டி மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருப்பார். மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று.

இந்த இரண்டு படங்களும் மம்மூட்டியின் நடிப்புத் திறனுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தன. ‘பொந்தன் மாடா’வில் அவர் ஒரு எளிய மனிதராகவும், ‘விதேயன்’ படத்தில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் அதிகாரியாகவும் என இரண்டு துருவமான கதாபாத்திரங்களை ஒரே ஆண்டில் கையாண்டதற்காக அவருக்கு இந்தத் தேசிய விருது வழங்கப்பட்டது.

1998-ல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (Dr. Babasaheb Ambedkar) ஆங்கில வரலாற்று திரைப்படத்துக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. ஜபார் பட்டேல் இயக்கிய இத்திரைப்படத்தில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மம்மூட்டி தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். அம்பேத்கரின் தோற்றம், அவரது உடல்மொழி, ஆளுமை மற்றும் அவரது மேடைப் பேச்சின் கம்பீரம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர மம்மூட்டி கடுமையாக உழைத்தார். இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த முக்கியப் போராட்டங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு, மற்றும் சமூக நீதிக்கான அவரது தேடல் ஆகியவற்றை மிகத் தெளிவாகப் பதிவு செய்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share