மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மசோதா அறிமுகமான நிலையில் ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேசி உள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகம் பாதிக்கப்பட்டால், 1950-60களில் இருந்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் கருப்பு உடையில் கருப்புக்கொடி ஏற்றி, மசோதா நகலை எரித்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
சென்னை அண்ணா அறிவாலையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மக்களவையில் 251 எம்.பி.க்களின் ஆதரவுடன் தொகுதி வரையறையுடன் இணைந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மசோதாவை அறிமுகம் செய்ய நடைபெற்ற வாக்கெடுப்பில் 251 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 151 எம்.பி.க்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும். தி மு க எம்பிக்கள் போராட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
