அழியாத படைப்புகளைக் கொடுத்தவர் ‘இயக்குநர் இமயம்’ – மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Bharathiraja

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது நீலாங்கரை இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

அவரைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
மேலும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் நடிகைகள் ரேவதி, ராதிகா, சுகன்யா உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!

ADVERTISEMENT

தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – ‘இசைஞானி’ இளையராஜா – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.

அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.

பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் பாரதிராஜவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share