டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக ஓட்டி அதனை யூடியூப்பில் பதிவிட்ட டிடிஎஃப் வாசன் மீது கோவை மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி அதனைத் தனது twin throttlers என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார் டிடிஎஃப் வாசன். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
வீடியோ பதிவிட்ட டிடிஎஃப் வாசன்
இந்நிலையில் செப்டம்பர் 14ம் தேதி டிடிஎஃப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து 150 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டி அலறவைத்தார்.
அதைப் பதிவு செய்து twin throttlers யூடியூப் சேனலிலும் வீடியோவாக இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகக் கூறி டிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் நேற்று டிடிஎஃப் வாசன் தனது யூடியுப் சேனலில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர், ”நான் அனைத்து வீடியோக்களையும் நகைச்சுவையாக எடுத்துச் செல்ல நினைக்கிறேன்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரிகிறது. ஜிபி முத்துவோடு பைக்கில் சென்றதைப் பார்த்து எத்தனை பேர் ரசித்திருப்பார்கள். ஆனால் நீங்கள் பார்க்கின்ற கோணமே வேறு.
இளைய தலைமுறைக்கு இது ஒரு தவறான பாடமாக இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இதனை நான் பயத்தோடு பேசவில்லை, பணிவோடு தான் உங்களிடம் பேசுகிறேன்.
எனவே என்னைத் தவறாகக் காட்ட வேண்டாம். இனிமேல் பொறுப்பாக நடந்து கொள்வேன்” என்று பேசியிருந்தார்.
கோவை காவல்துறை வழக்குபதிவு
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 20) மாலை அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து டிடிஎஃப் வாசன் மீது போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாகக் கோவை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14ம் தேதி டிடிஃப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து,
கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு,
எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி,
அதைப் பதிவு செய்து அவரது twin throttlers யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மோனிஷா