பெர்லினில் ’கொட்டுக்காளி’ : சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சூரி

Published On:

| By christopher

பிரபலமான பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரி நடிப்பில் உருவான ‘கொட்டுக்காளி’ படம் வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் பரோட்டா சூரியாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் சூரி. அதன் பின்னர் முன்னணி காமெடியனாக தமிழ்சினிமாவை வலம் வந்த அவர், தற்போது ஹீரோவாக பரிணமித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த ’விடுதலை பாகம் 1’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ மற்றும் துரை செந்தில் குமாரின் ‘கருடன்’ என அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சூரியின் ‘விடுதலை’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ என இவ்விரண்டு திரைப்படங்களும் கடந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. இரண்டு படங்களுக்கும் அங்குள்ள ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

Image

அதனைத்தொடர்ந்து இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம், பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா 2024 க்கிற்கு தேர்வாகி, நேற்று திரையிடப்பட்டது.

Image

 

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். மிகவும் மதிக்கப்படும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான கொட்டுக்காளி, உலக அரங்கேற்றத்தை நடத்தியது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு கிடைத்த ரசிகர்களின் அபாரமான வரவேற்பில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதனைதொடர்ந்து நடிகர் சூரியும் தனது எக்ஸ் பக்கத்தில், ”உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெர்லின் திரைப்பட விழாவில் கோட் சூட் மற்றும் தமிழரின் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டையில் நடிகர் சூரி மற்றும் கொட்டுக்காளி படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கிறிஸ்டோபர் ஜெமா

மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில் இயக்கம்!

மோடிக்கு ஷாக் தந்த சர்வே… தமிழக வருகை தள்ளிப் போவது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share