மோடிக்கு ஷாக் தந்த சர்வே… தமிழக வருகை தள்ளிப் போவது ஏன்?

Published On:

| By Aara

The survey gave a shock to Modi

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மற்றும் அனைத்து மாநில பிரதிநிதிகள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) டெல்லியில் தொடங்கியிருக்கிறது. நேற்றும், இன்றும் நடக்கும் இந்த முக்கியமான கூட்டத்தில் பாஜகவின் ஒவ்வொரு மாநிலத்துக்குமான தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவில் இன்று பிரதமர் மோடி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மற்ற மூத்த நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலும் கைப்பற்றும்’ என்று நம்பிக்கையாக பேசியிருந்தார். அதுமட்டுமல்ல, ‘எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இருக்க மக்கள் ஆசீர்வதிப்பார்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார்.

இந்த நிலையில்தான் மோடிக்கு கிடைத்திருக்கும் ஒரு சர்வே ரிசல்ட் அவரை மட்டுமல்ல, பாஜக தேசிய முக்கிய நிர்வாகிகளையும் ஷாக் அடைய வைத்திருப்பதாக சொல்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

The survey gave a shock to Modi

இதுபற்றி நாம் டெல்லி வட்டாரத்தில் பேசியபோது, “தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கான சாதக பாதகங்கள் என்னவென்று ஒவ்வொரு வாரமும் பாஜக தேசிய அளவில் சர்வே எடுத்து வருகிறது.

ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பிறகான சர்வேயில் இந்தியா முழுதும் ராமர் கோயில் மூலமாக பாஜகவுக்கு சாதகமான ஒரு எழுச்சி ஏற்பட்டதாக சர்வே முடிவுகள் தெரிவித்தன. இதனால் நம்பிக்கையோடு இருந்தார் பிரதமர் மோடி.

ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் கிடைத்த சர்வே முடிவுகளில், ‘ராமர் கோயில் மூலம் ஏற்பட்ட எழுச்சி வட இந்தியாவில் குறைந்து வருவதாகவும் குறிப்பாக மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே குறைந்து வருவதாகவும் தெரிய வந்திருக்கின்றன. இதனால் உடனடியாக இந்திய அளவில் மாற்று வியூகத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். இதன் விளைவாகத்தான் இவ்வளவு விரிவான நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

வட இந்தியாவில் மிகவும் செல்வாக்காக வெற்றி பெறுவோம் என்று மோடி நம்பிக்கொண்டிருந்த நிலையில்… இப்படி ஒரு ரிப்போர்ட் கிடைத்த நிலையில்தான்… தென்னிந்தியாவை நோக்கியும் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் மோடி.

இதன் கூடுதல் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு பாஜகவின் தேசிய தலைமை தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லை.

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க முடியும் என்று தேசிய தலைமைக்கு நம்பிக்கை ஊட்டி வந்தார். இந்த நிலையில் அதிமுக அல்லாத பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குள் வருவதில் தாமதம் ஆவதால் தான் பிரதமர் மோடியின் தமிழக வருகையும் தள்ளிப் போகிறது.

அண்ணாமலை மீது முழு நம்பிக்கை வைத்து கூட்டணி விவகாரத்தில் முழு சுதந்திரம் அளித்தார் மோடி. ஆனால் இப்போது அண்ணமலை மீது சற்று வருத்தத்தில்தான் இருக்கிறார். தன் வருத்தத்தை பி.எல். சந்தோஷிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மோடி” என்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

நடிகர் விஜய் கட்சி பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்!

முதியோர்களுக்கான உதவித்தொகை ஏழு மாதங்களாக நிறுத்தம்!

பட்டாசு விபத்து – 10 பேர் பலி : விருதுநகரில் சோகம்!

ஹெல்த் டிப்ஸ்: வாய்வு தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தீர்வு!

உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்!