தொகுதிப் பங்கீடு: கொமதேக பாசிட்டிவ் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

திமுக உடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுடன் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன்,

“திமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கூட்டணிப் குறித்துப் பேசியதை வெளியில் சொல்ல முடியாது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதனைத் தான் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளது. எல்லாம் பாசிட்டிவாக போய்க்கொண்டிருக்கிறது. வெகு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் இன்று மரபை மீறி, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகளை பேசுவதற்கு அவர் தயங்குகிறார். தமிழக அரசை செயல்பட விடுங்கள் என்று ஆளுநரை இயக்குகிற மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நம்பிக்கை வாக்கெடுப்பு : பெரும்பான்மையை நிரூபித்த நிதிஷ் குமார்

மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டி: ஐயூஎம்எல் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share