ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கக்கோரி திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் கோரிக்கை வைத்திருப்பதாக, ஐயூஎம்எல் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன்,
“நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து பரிசீலிப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்தபோது தான் ஐயூஎம்எல் மாநிலங்களவையில் 15 ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்தோம்.
அந்த தொடர் வரலாறு மீண்டும் தமிழக அரசியலில் புதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
இந்தியாவின் பாரம்பரியத்தையும், பன்முகத்தன்மையையும் பாஜக அரசு குழிதோண்டி புதைத்திருக்கிறது. வருங்காலத்தில் புதிய இந்தியாவாக மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம்.
அதற்கான வேலைகளை அனைத்து மாநிலங்களிலும், ஐயூஎம்எல் செய்ய இருக்கிறது. வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி டெல்லியில் காயிதே மில்லத் செண்டர் என்ற அலுவலகம் பதிவு செய்யப்படவிருக்கிறது.
விரைவில் அந்த கட்டிடம் திறப்பு விழா நடத்தப்படும். அதற்காக திமுக தலைவர் மற்றும் எம்.பி-க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.
மீண்டும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளர் போட்டியிடுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காதர் மொய்தீன்,
“ஐயூஎம்எல் கட்சி பொதுக்குழு கூட்டப்பட்டு வேட்பாளர் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு!
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: விசிக கேட்கும் தொகுதிகள்!