வெளிமாநில பூண்டு வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுக்க பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.600 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால், ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றம் போன்ற காரணங்களால் விளைச்சல் 70 சதவிகிதமாக குறைந்துள்ளது.
தற்போது வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளதால், மலைப்பூண்டு விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.250 வரை விற்றது. கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. விளைச்சல் பாதித்தாலும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பூண்டின் விலை கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள கொடைக்கானல் மலைப்பூண்டின் விலை கடந்த ஐந்து மாதங்களாக ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: இறால் கஞ்சி
அரசியல் சூப்பர் ஸ்டார் : சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்!
திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் கைது… எடப்பாடியை குற்றஞ்சாட்டிய கே.என்.நேரு
தற்கொலை… மனநல பிரச்சனை : விவகாரத்துக்கு பின் முதல்முறையாக பேசிய ரஹ்மான்