“சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அடுத்தவர்கள் கொடுக்க வேண்டும். அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று (நவம்பர் 28) தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் கூட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நானும், ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.
உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா?
காரணம், ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் நாம் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துவிட்டார்கள்” என சீமான் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அடுத்தவர்கள் கொடுக்க வேண்டும். அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது.
அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு புதிய மரியாதையை தேடித் தந்த, உலக நாடுகளால் சிறந்த தலைவர் என போற்றப்படும், உலக நாடுகளின் உயரிய விருதுகளை பெற்று வரும் பிரதமர் மோடி மட்டும் தான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது பற்றி அவர் பேசுகையில், “விஸ்வகர்மா திட்டத்தால் சமூகநீதி பாதிக்கப்படும் எனக் கூறி கைவினைக் கலைஞர்களின் வாழ்வை முடக்குவதற்கு நடத்தப்படும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. காவி என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமான நிறம் அல்ல; அது நாட்டின் பாரம்பரியம். விஸ்வகர்மா திட்டம் குறித்து திமுக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: அதிமுக பொதுக்குழு… எடப்பாடி வைக்கும் ட்விஸ்ட்!
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் குறைபாடுகள் : ஆய்வுக்குழு அமைத்த மத்திய அரசு!