இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ‘இப்போது நம் அனைவருக்கும் மனநலப் பிரச்சினைகள் உள்ளது. ஏனென்றால் நம் அனைவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் இருப்பதாக கருதுகிறோம். அந்த வெற்றிடத்தை நிரப்ப தத்துவங்களை கேட்கிறோம், கதைகள் படிக்கிறோம் . இது நமக்கு மருந்து போல செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர், தான் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் மனநல பிரச்சனை தொடர்பாக பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துரையாடினார்.
அப்போது, ‘ நான் சிறுவயதில் இருந்த போது தற்கொலை எண்ணம் கூட இருந்தது. இதனை அறிந்த எனது தாயார், நீ உனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் போது, இத்தகைய நினைவுகள் வராது’ என்று அறிவுரை சொன்னார்.
தாயிடம் இருந்து நான் பெற்ற மிகச்சிறந்த அறிவுரை இது. நமக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் போது, சுயநலம் மறைந்து போய் விடுகிறது. வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைக்கிறது. அடுத்தவர்களுக்காக பாடல் அமைக்கும் போது, எழுதும் போது, மற்றவருக்காக உணவு வாங்கும் போது நாம் அடுத்தவர்களுக்காக வாழ தொடங்குகிறோம். நம்மால் மற்றொருவர் முகத்தில் சிரிப்பை பார்ப்பதுதான் அடுத்தவர்களுக்காக வாழ்வது.
நமது வாழ்க்கையை பற்றி நமக்கு பெரிதாக தெரியாது. மிகப் பெரிய நல்ல விஷயம் வருங்காலத்தில் நமக்காக காத்திருக்கலாம். அதுதான், நம்மை தொடர்ந்து வாழ வைக்கும். எல்லோருக்கும் இருண்ட பக்கம் இருக்கிறது. நாம் இந்த மண்ணில் பிறக்கிறோம். இறக்க போகிறோம். இது நிரந்தரமில்லை. ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறோம்’ என்று பேசியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘பச்சன்’ குடும்ப பெயரை துறந்தாரா ஐஸ்வர்யா? : துபாயில் நடந்த அந்த சம்பவம்!
ஃபெங்கல் புயல்… சென்னைக்கு மழை உண்டா? : வெதர்மேன் அப்டேட்!