"Edappadi Palaniswami is the reason for the increase in property tax": K.N. Nehru

திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் கைது… எடப்பாடியை குற்றஞ்சாட்டிய கே.என்.நேரு

அரசியல்

சொத்துவரி உயர்வுக்கு எதிராக போராடிய அதிமுக கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், “சொத்துவரி உயர்வுக்கு காரணமே எடப்பாடி பழனிசாமி தான்’ என அமைச்சர் கே.என்.நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று (நவம்பர் 28) காலை தொடங்கியது.

அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் அமளி!

அடுத்த சில நிமிடங்களில் அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து வந்த அக்கட்சி கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்களை மேயர் சமாதானப்படுத்த முயன்றும், ’சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்’, ’சிறப்பு மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும்’ என்று கோஷம் எழுப்பியபடி அதிமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து முக்காடு போட்டு அமளியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜகவினரும் சொத்து வரி உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவிக்க, 15 நிமிடங்களில் மாமன்ற கூட்டம் நிறைவடைந்தது.

சாலையில் போராட்டம் – கைது!

இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, “திராவிட மாடலில் ஜனநாயகத்துக்கு இடமுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் கருத்தை மாமன்றத்தில் பிரதிபலிக்க இடம் தரமறுக்கிறார்கள். மக்கள் மற்றும் தொழிலை வஞ்சிக்கும் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்.” என்று கூறினார்.

அவர்களுடன் போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைய, போராட்டத்தில் ஈடுபட்ட 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார் 2 வேன்களில் ஏற்றி கைது செய்தனர்.

அவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்எஸ்எம் ஆனந்தன், வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்

மத்திய அரசின் கொள்கையால் வரி உயர்வு அமல்!

கவுன்சிலர்களின் போராட்டம் குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இத்தனை நாள் இல்லாமல் அரசியலில் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே, அதிமுக இப்படி செய்கிறது. மத்திய அரசின் கொள்கையால் வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோரின் கோரிக்கை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தப்படும். வரி உயர்வு தொடர்பாக விளக்கம் தர தயாராக இருந்த நிலையில், அவர்கள் அதனை கேட்க முன்வராமல் குந்தகம் ஏற்படுத்தி உள்ளனர்.” என்று மேயர் தெரிவித்தார்.

எடப்பாடி கண்டனம்!

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

புரையோடிப் போன அரசு இயந்திரம், நிர்வாக சீர்கேடு.. 11 வயது சிறுவன் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் | Times Now Tamil

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு; இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும் திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் அதிமுக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்தார்.

பேரிடரிலும் விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி'' - கே.என்.நேரு கண்டனம் | K.N Nehru about edappadi palanisamy - Vikatan

சொத்துவரி உயர்வுக்கு காரணமே எடப்பாடி தான்!

இந்த நிலையில் சொத்துவரி உயர்வுக்கு காரணமே எடப்பாடி பழனிசாமி தான் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராய் அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியினை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது, வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது’ . அதேபோல மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா திட்டம்’ மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும். அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது.

மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது, அவர்களோடு நட்புறவில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து உள்ளாட்சி அமைப்புகளை எல்லாம் திவாலாக்கிய எடப்பாடி பழினிசாமி அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்கள் கட்சியின் கலவர ஆய்வுக் களேபரங்களை மறைத்து திசை திருப்பவும் மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

15வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறுவழியின்றி, தமிழ்நாட்டு மக்கள் மீது மாறா அன்பும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக மிக குறைந்த அளவு சொத்து வரியினை உயர்த்த உத்தரவிட்டார்.

அந்த வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது” என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’போடா ஃபெங்கலு’ : அப்டேட் குமாரு

வயநாடு வெற்றி : கேரள பெண்ணாகவே மாறிய பிரியங்கா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *