கேரளாவை உலுக்கும் ‘வந்தே மாதரம்’ சர்ச்சை: ஆளுநர் காட்டம்.. முதல்வர் சதீஷன் செய்தது என்ன? பினராயி விஜயன் பகீர் கருத்து

Published On:

| By Mathi

Kerala 'Vande Mataram' Row Shakes State Politics

தமிழ்நாட்டில் அரசு விழாவில் வந்தே மாதரம் (Vande Mataram) பாடப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில் கேரளாவிலும் (Kerala) பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய கீதம் சர்ச்சை

தமிழகத்தில் அரசு விழாக்களில் மாநிலத்தின் பாடலான, “தமிழ்த் தாய்” வாழ்த்து முதலில் இசைக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் ‘தேசிய கீதம்’ இசைக்கப்படும்.

ADVERTISEMENT

ஆனால் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, அரசு நிகழ்ச்சிகளிலும் சட்டசபையிலும் தேசிய கீதத்தை கண்டிப்பாக முதலில் பாட வேண்டும் என வலியுறுத்தியது பெரும் சர்ச்சையானது; இதனால் சட்டசபையில் இருந்து ஆளுநராக இருந்த போது ஆர்.என்.ரவி வெளிநடப்பும் செய்தார்.

தமிழ்நாட்டில் வந்தே மாதரம்

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று மே 10-ந் தேதி புதிய முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருக்கு கேரளா ஆளுநராகவும் தமிழ்நாட்டின் கூடுதல் ஆளுநராகவும் உள்ள அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

அந்நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல், அடுத்து தேசிய கீதம், 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவிலும் இதே வரிசை பின்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ADVERTISEMENT

அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்த போது இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றும் கொடுத்திருந்தார். அதில், மாநில அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால் ஆளுநர் மாளிகை தரப்பிலோ, மத்திய அரசின் ‘வந்தே மாதர பாடல்’ வழிகாட்டுதல்களின்படியே செயல்படுகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேரளாவில் (KERALA) என்ன நடந்தது?

கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யூடிப் (UDF) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வி.டி. சதீஷன் முதல்வராக பதவியேற்றார். அவருக்கும் ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போதும் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை இசைக்கப்பட்டன.

இதற்கு கேரளாவின் எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வந்தே மாதரம் என்பது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வலியுறுத்தக் கூடிய பாடல்; காங்கிரஸ் கட்சியான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு அடிபணிந்துவிட்டது எனவும் விமர்சித்தன.

கேரளா சட்டசபையில்…

இந்நிலையில் கேரளாவில் முதல்வர் வி.டி. சதீஷன் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று மே 29-ந் தேதி தொடங்கியது. இந்த முதலாவது கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார்.

இன்றைய சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, வந்தே மாதரத்தின் முழு வடிவத்தையும் இசைக்குழுவின் மூலமாக இசைக்காமல் அதன் இரண்டு சரணங்களை மட்டும் அதாவது வந்தே மாதரத்தின் முதல் பகுதி மட்டுமே பாடப்பட்டது.

கேரளா ஆளுநர் அர்லேகர் கடும் அதிருப்தி

கேரளா காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் அர்லேகர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்லேகர், “ஆளுநர் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் நெறிமுறைகளின்படி வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அவர்கள் முழுமையாக இசைக்கவில்லை. இது நெறிமுறை மீறல் (Protocol Violation)” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளா கட்சிகளின் நிலைப்பாடு

  • கேரளாவில் ஆளும் காங்கிரஸை பொறுத்தவரை சட்டசபையில் முழு வந்தே மாதரம் பாடலையும் இசைக்காமல் பாதி பாடலை மட்டுமே ‘பெயரளவுக்கு’ பாடியது. இதற்கு காரணமாக, ”1937-ம் ஆண்டு வந்தே மாதரம் சர்ச்சை ஏற்பட்ட போது, முதல் இரு சரணங்களை மட்டும் பாடலாம் என காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது. அதனை பின்பற்றியே தற்போது கேரளா காங்கிரஸ் அரசு செயல்பட்டுள்ளது” என்கின்றனர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.
  • கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை வந்தே மாதரம் பாடல் என்பது மத அடையாளங்களைக் கொண்டது என்பதால் ஏற்க முடியாது என்கின்றன. மேலும் வந்தே மாதரம் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்.
  • பாஜகவோ, வந்தே மாதரம் பாடப்பட்ட 150-வது ஆண்டு விழாவில் வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என குற்றம்சாட்டுகிறது.

வந்தே மாதரம் பாடல் என்பது என்ன?

  • பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880இல் ‘ஆனந்த மடம்’ என்று ஒரு நாவலை வங்காள மொழியில் எழுதினார். அந்த நாவலில் வரும் வங்காள மொழிப் பாடல்தான் ‘வந்தே மாதரம்’.
  • ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை – ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து – ஆங்கிலேயர்களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும். இதுவே இந்த நாவலின் மய்யக் கருத்து.
  • வைணவ இந்து இளைஞர்கள் – ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் – அவரது சீடராக குரு பவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா – இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறார். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)
  • ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து – வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி – முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து விட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
  • 1905இல் – வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடைவிதித்தது.
  • முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார். அகில இந்திய முஸ்லிம் லீக் இந்தப் பாடலை எதிர்த்து. அதன்பிறகு, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன், இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பாடப்படும், தேசியப் பாடலாக முதல் இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது

வந்தே மாதரம் சர்ச்சை ஏன்?

  • வந்தே மாதரம் பாடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை ஒட்டி மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
  • அதில், வந்தே மாதரம் பாடலின் மொத்தம் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும்; தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஆகியவை ஒன்றாகப் பாடப் பட வேண்டும். அதுவும் தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.
  • மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
  • வந்தே மாதரம் பாடலே மதச்சார்புடையது என்பதால் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்க்கின்றன; காங்கிரஸ் கட்சி இதில் சர்ச்சை இல்லாத 2 சரணங்களை பாடலாம் என்கிறது. பாஜகவோ வந்தே மாதரம் ஒரு தேசியப் பாடல். தேசிய கீதத்தைப் போல மரியாதைக்குரியது என்கிறது.
Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share