தமிழக சட்டசபை தேர்தலில் குழந்தைகளை பயன்படுத்தி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு சேகரித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏப்ரல் 21-ந் தேதி நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசிய விஜய், “தன்னுடைய கட்சியின் விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என பெற்றோருக்கு குழந்தைகள் அழுத்தம் தர வேண்டும்” என பேசினார். குழந்தைகள் தங்களது பெற்றோர், தாத்தா-பாட்டி, அண்ணன்-அக்கா ஆகியோரைத் தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆகையால் குழந்தைகள் மீது தமது செல்வாக்கை விஜய் செலுத்தியது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, அறப்போர் இயக்கம் சார்பில் ஆலங்குளம், மயிலாப்பூர் மற்றும் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்தது; அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஏப்ரல் 22 அன்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அளித்த மனு மீது இதுவரை எவ்வித வெளிப்படையான விசாரணையும் தொடங்கப்படவில்லை” என பொதுநலன் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் கடந்த மே 21-ந் தேதி விசாரித்தனர். அன்றைய விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தவெக- திமுக- அதிமுக கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் பெஞ்ச் முன்பாக இன்று மே 29-ந் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது தவெக சார்பாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ். முரளிதர் ஆஜராகி, பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜரானார். தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
