நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலியின் தாயாரும் காவல் உதவி ஆய்வாளருமான (எஸ்.ஐ) கிருஷ்ணகுமாரி 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ். இவர் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி திருநெல்வேலி டி.கே.சி நகரில் கொடூரமான முறையில் வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில், கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவரைப் பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பு ஆய்வாளர்கள் (SI) சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சரவணன், அவரது உறவினர் ஜெயபால் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். இதில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், கவின் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும், கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் தடயங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், எஸ்.ஐ கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை போலீஸார் நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
