திருநெல்வேலி ஐடி பணியாளர் கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை கவின் ஜாதி ஆணவப் படுகொலை தமிழ்நாட்டை உலுக்கியது. கவினை வெட்டிப் படுகொலை செய்ததாக அவரது காதலியின் தம்பி சுர்ஜித் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கவின் படுகொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிறையில் இருந்த சுர்ஜித், தந்தை சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (CRMP No.320/25) சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமா, இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி இந்த மனுவை விசாரித்தார். இன்றைய விசாரணையின் முடிவில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருவரையும் ஆகஸ்ட் 13-ந் தேதி மாலை 6 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
