“மகளிர் சிறப்பு அதிரடிப்படை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்?” – தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி!

Published On:

| By Pandeeswari Gurusamy

kanimozhi

மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பெண்கள் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு பல தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். மேலும், இப்படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்குச் சிறப்புச் சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்க விழா கடந்த 27ஆம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. தமிழக முதல்வர் விஜய் இத்தொடக்க விழாவில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் முதல்வர் விஜய் டெல்லி சென்றுவிட்டதால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தைத் தமிழக முதல்வர் விஜய் இன்று தொடங்கிவைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ராஜரத்தினம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பிப் பதிவிட்டுள்ளார். அதில்:

“கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த அரசு என்ன செய்யப்போகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share