‘கருத்த மச்சான்’ பாடல்…இதெல்லாம் ட்ரெண்டு… : இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? நீதிமன்றம் கேள்வி!

By Kavi

|

Published on 26 Nov 2025, 8:50 PM

டியூட் திரைப்படத்தில் ‘கருத்த மச்சான்’ பாடலை பயன்படுத்தியதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கராஜன், மமீதா பைஜூ, சரத்குமார், ரோகிணி ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் டியூட் .

ADVERTISEMENT

இதில் இளையராஜா இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல்கள் இடம் பெற்றிருந்தன. 

இந்நிலையில் தனது இசையில் வெளியான இந்த இரண்டு பாடல்களையும் டியூட் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன் இன்று (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. 

அப்போது 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடலை தற்போதும் கூட கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எவ்வாறு பாதிப்படைகிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது என்றும் தெரிவித்தார். 

ADVERTISEMENT

இதற்கு இளையராஜா சார்பில், அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. 

அப்போது டியூட் பட தயாரிப்பு நிறுவனத்திடம் தொடர்ச்சியாக இளையராஜாவின் பாடல்களை பதிப்புரிமையை மீறி மற்ற படங்களில் பயன்படுத்துவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்று இருந்தது. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதி, படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் வெளியாகும் வரை அமைதியாக இருந்து விட்டு தற்போது வழக்கு தாக்கல் செய்வது ஏன் என்று இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். 

இதற்கு இளையராஜா சார்பில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதுபோல எந்த நபரும் இல்லை என்று நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel