கரூர் வழக்கு: திமுக மனுவை வாபஸ் பெற்றது ஏன்? வில்சன் எம்பி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று சுட்டிக் காட்டியுள்ளது என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி வில்சன் கூறியதாவது:”கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதன் 33-வது பத்தியில் நீதியரசர் அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று நபர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்கு வழக்கை முழுமையாகக் கண்காணிக்கும் 5 முக்கிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன:

ADVERTISEMENT
  • சிபிஐ விசாரணை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என வழிகாட்டுதல் மற்றும் கண்காணித்தல்.
  • சிபிஐ திரட்டும் சாட்சியங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, விசாரணை சரியான முடிவை எட்டுவதை உறுதி செய்தல்.
  • கரூர் சம்பவம் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து, வெளிப்படையான விசாரணைக்காகத் தேவைப்பட்டால் குழுவே நேரடியாக விசாரணை நடத்துதல்.
  • முன்னாள் நீதிபதியின் வழிகாட்டுதலின்படி, குழுவிற்கான தனி நடைமுறைகளை அவர்களே வகுத்துக் கொள்ளுதல்.
  • விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ மாதாந்திர அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான உத்தரவுகளை பிறப்பித்தல்.

இவ்வாறு கரூர் விவகாரத்தில் முடிவெடுக்கும் முழு அதிகாரமும் ஏற்கனவே இந்த 3 நபர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று சுட்டிக்காட்டினர். நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலை ஏற்று, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது” என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு

தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது நிச்சயமாக நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டம் உங்களுக்கு என்ன உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்கியுள்ளதோ, அதன் வழியே நீங்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தபடி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் இன்று நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சர் பேசியது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஒரு அமைச்சரே ஊடகங்கள் வாயிலாக ஒரு குறிப்பிட்ட கதையை (Narrative) உருவாக்க முயல்வது, ஏற்கனவே காவல் துறை அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் பதிவு செய்துள்ள சாட்சியங்களைப் பாதிக்கும். சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவுமே திமுக இந்த மனுவைத் தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் தற்போதைய கருத்துகளின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share