மதுரையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மதுரையில் சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் ஆளுநர் அர்லேகர் இன்று ஜூலை 2-ந் தேதி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், ”மதுரை | வைகை ஆற்றைப் பார்த்தேன்; ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்! மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என எச்சரித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரனுடன் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், நீர்நிலைகள் பராமரிப்பு, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் அர்லேகர் ஆய்வு நடத்தினார்.
மதுரை மாநகர காவல் ஆணையருடனான ஆலோசனையில் பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “ தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, “உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்” என்று கூறியுள்ளார்.
ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?
ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு.
சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர் என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
