சிவகங்கை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட பங்கேற்காததை சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று (நவம்பர் 26) தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிவகங்கையில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (DISHA) கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் அரசுத் திட்டங்களையும் ஆய்வு செய்வதற்கான அமைப்புதான் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு.



மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இத்தகைய கூட்டங்களைப் புறக்கணிப்பது தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.









