பள்ளிக் கூடத்தில்’ரீல்ஸ்’.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

உத்திரமேரூர் அடுத்துள்ள தளவாரம் பூண்டி அரசு தொடக்கப் பள்ளியில், விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தளவாரம் பூண்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவர், தனது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் சென்றுள்ளார். அங்கு, பள்ளி நடைபெறும் போது வகுப்பு ஒன்றில் நுழைந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி ‘ரீல்ஸ்’ வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளி வளாகத்திற்குள் அரசியல் கட்சியினர் புகுந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தவெகவினரின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலைமைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும் பொறுப்பு அமைச்சருமான தென்னரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்ட உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தற்போது கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் ரீல்ஸ் எடுத்த விவகாரத்தில் தவெக நிர்வாகி நீக்கப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share