சத்தீஸ்கரில் சாலை அமைப்பதில் நடந்த ரூ.120 கோடி மதிப்பிலான ஊழல் குறித்த செய்தி, பத்திரிகையில் வெளியான நிலையில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டு வளாகத்தினுள் அந்தச் செய்தியை எழுதிய முகேஷ் சந்த்ரகர் என்கிற 28 வயது பத்திரிகையாளர் பிணமாக மீட்கப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் காணாமல் போன முகேஷ், சமீபத்தில் சுரேஷ் என்ற ஒப்பந்ததாரருக்கு எதிராக விசாரணை நடத்தி பஸ்தரில் சாலை அமைப்பதில் நடைபெற்ற ரூ.120 கோடி முறைகேட்டை அம்பலப்படுத்தியிருந்தார். அந்த செய்தியைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் சுரேஷின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சுரேஷின் சகோதரரை சந்திக்க சென்ற முகேஷ், அதன் பின்பு காணாமல் போய்விட்டார், அவரது மொபைல் போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று முகேஷின் மூத்த சகோதரர் யுகேஷ் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, நேற்று முன்தினம் (ஜனவரி 3) வெள்ளிக்கிழமை சட்டன்பாராவில் உள்ள சுரேஷுக்கு சொந்தமான வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியில் இருந்து முகேஷின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “உயிரிழந்தவரின் சகோதரர், தனது தம்பியை ஜனவரி 1-ம் தேதி முதல் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம். சிசிடிவி வீடியோ காட்சிகளையும், முகேஷ் கடைசியாக இருந்த இடங்களையும் ஆராய்ந்தோம். வெள்ளிக்கிழமை மாலையில் முகேஷின் சடலத்தை கழிவுநீர் தொட்டியில் இருந்து கண்டெடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுதொடர்பாக சுரேஷின் சகோதரர்கள், தினேஷ் மற்றும் ரிதேஷ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ் தலைமறைவாக உள்ளார். ஒப்பந்ததாரரின் வட்டாரங்களுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று போலீஸார் தெரிவித்தனர்.
முகேஷின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிஜப்பூரின் இளம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகரின் மரணச் செய்தி மிகவும் துயரமானது. மன வருத்தத்தை தந்தது. எந்தச் சூழ்நிலையிலும் குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே முகேஷின் கொலைக்கு, ‘தி எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா’ கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கரின் இளம் சுயாதீன பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. சமீபத்தில் அவர் ஒரு சாலை ஊழல் தொடர்பான செய்தியினை வெளியிட்டிருந்தார். அது சில ஒப்பந்ததாரர்கள் குறித்த விசாரணைக்கு வழிவகுத்திருக்கிறது.
இளம் பத்திரிகையாளரின் மரணம் மிகவும் கவலையளிக்கிறது. பத்திரிகையாளர்கள் அதிலும் குறிப்பாக சிறிய நகரங்கள் அல்லது கிராமப் பகுதிகளில் இருந்து பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு எந்த தீங்கு அல்லது அச்சுறுத்தல் ஏற்படாதவாறு நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளும் தங்களால் முடிந்தவற்றை செய்யுமாறு எடிட்டர்ஸ் கில்டு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இம்சை… தலைமை செயலகம் முன்பு அரசு ஊழியர் தற்கொலை போராட்டம்!
ரூ.400 கோடி சேல்ஸ்… காலண்டர் விற்பனையில் அசத்திய சிவகாசி!
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்!
ஆண்ட பரம்பரையை அரள வைத்த இந்தியர்கள்… லண்டனை கைப்பற்றியது எப்படி?
அண்ணா பல்கலை மாணவி வழக்கு… அரசியலாக்குவது ஏன்?: நீதிபதி வேதனை!