அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை அரசியலாக்குவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலை மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த கொடுமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (ஜனவரி 2) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பு தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட வந்த சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பாமக வழக்கறிஞர் பாலு, போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “இந்த சம்பவம் உண்மையான அக்கறை இன்றி அரசியல் ஆக்கப்படுகிறது” என்று வேதனையை தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “போரட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதலில் கூறுங்கள்.
இப்படி ஒரு கொடுமை நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காகவும் ஊடக வெளிச்சத்துக்காகவும் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.
இந்த சமூகத்தில் பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என தெரிவித்தார்.
பாமகவின் போராட்டத்துக்கும் அனுமதி மறுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன் தான்… -தைலாபுரத்தில் ராமதாஸ் திட்டவட்டம்!