தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, கோவையில் உள்ள தன் வீட்டு வாசலில் எட்டு முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தினார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரை இந்தப் போராட்டம் எதிரொலித்தது.,
தமிழ்நாட்டில் பலர் அண்ணாமலையின் இந்தப் போராட்டத்தால் எந்த பலனும் இல்லை, இது பிற்போக்கானது என்று கண்டித்தாலும்… உண்மையிலேயே இந்த சாட்டையடிப் போராட்டத்தால் அண்ணாமலைக்கு பெரிய பலன் கிடைத்திருக்கிறது என்கிறார் ஆங்கிலப் பத்திரிகையாளார் லட்சுமி சுப்பிரமணியன்.
’தி வீக்’ இதழில் ஜனவரி 1 ஆம் தேதி அவர் எழுதிய கட்டுரையில்,
“சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து திரும்பியதிலிருந்து, அண்ணாமலை அதிமுக தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அமைதியாகவே இருந்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று ஒரு காலத்தில் கூறியவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்து முடிவு செய்ய நிறைய நேரம் இருப்பதாக இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின் அடக்கமாகக் கூறினார்.
அதிமுகவை மட்டுமல்ல, ஆளும் திமுகவைத் தாக்கும் அண்ணாமலையின் வழக்கமான பாணியும், அவரது சத்தமான பத்திரிகையாளர் சந்திப்புகளும், கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அளித்த கட்டளைகளும் அவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு சுருதி குறைந்து போயின.

அவரது மௌனத்திற்கான உண்மையான காரணம் அவரது உறவினர்களின் இடத்தில் சமீபத்தில் நடந்த ஐடி சோதனைகள் என்று பாஜக உள் வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில் கோயம்புத்தூரில் அவரது உறவினர்களின் இடங்களில் நடந்த சோதனைகள், பெரும்பாலான பிரச்சினைகளில் அண்ணாமலையை மௌனமாக்கியுள்ளன என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் செந்தில் குமாருடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் திண்டுக்கல்லில் இருந்து கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள பல இடங்கள் வரை விரிவடைந்தன.

இந்த சோதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’ஆம். அவர் எனது தூரத்து உறவினர். ஆனால் சோதனைகளை நிறுத்த வருமான வரித்துறையை நான் கேட்க மாட்டேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள்’ என்று விளக்கினார்.
இருப்பினும், செந்தில் குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும், கோவை சரவணம்பட்டியில் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் பல தொழில்களிலும் அண்ணாமலைக்கு உள்ள தொடர்புகளை வெளிப்படுத்துவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையை அழைத்து அவரது ரியல் எஸ்டேட் முதலீட்டு தொடர்புகள் குறித்து விசாரிக்க டெல்லி திட்டமிட்டிருந்தது.
இதில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்காகத்தான் அவரது சுய சாட்டையடிப் போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாமலையின் போராட்டம் பேசுபொருளானதால், டெல்லி விசாரணை படலத்தை நிறுத்தி வைத்துள்ளது. அண்ணாமலை, சமீபத்தில் அமித் ஷாவுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நகர்த்தவோ அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ தேசியத் தலைமை யோசிக்கிறது.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன்
அண்ணாமலையின் இந்த சாட்டையடிப் போராட்டம் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான ஒரு பொருத்தமான போராளியாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது மட்டுமல்லாமல், தனது கட்சியின் தேசியத் தலைமையின் நடவடிக்கையில் இருந்தும் தற்காலிகமாக தப்பிக்க அண்ணாமலைக்கு உதவியுள்ளது” என்று அந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார் ஆங்கிலப் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பஸ்சில் மூட்டை கடி…நீதிமன்ற உத்தரவால் பீதியடைந்த ரெட் பஸ் ஆப்!