அரசு ஊழியர்கள் நலன் கருதி புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டம் (NHIS) 2008-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞரால் கொண்டு வரப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்க கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காப்பீடு திட்டத்திற்காக ரூ.395 பிடித்தம் செய்யப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.497 பிடித்தம் செய்யப்படுகிறது.
யுனைடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தால் பலன் கிடைக்காமல் மிகவும் மனவேதனை அடைந்து வருவதாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த இன்சூரன்ஸ் சேவை சரியில்லாததால் மீண்டும் யுனைடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று கடுமையான போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், தருமபுரியை சேர்ந்த கல்வி துறையின் முன்னாள் அதிகாரி சுப்பிரமணி கண்ணீருடன் நமது அலுவலகத்திற்கு வந்தார்.
தன்னை அறிமுகம் செய்துகொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனம் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக நம்மிடம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “நான் 1987-ல் பணியில் சேர்ந்தேன். 2018-ல் ஓய்வு பெற்றேன். 31 வருடங்கள் அரசு ஊழியராக பணிபுரிந்தேன்.
நான் ஓய்வு பெற்றதில் இருந்து காப்பீடு திட்டத்திற்கு மாதம் ரூ.497 பிடித்தம் செய்து வருகின்றனர். என்னைப் போன்ற ஓய்வு பெற்ற நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இதே போல் காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்து வருகின்றனர்.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு அப்பல்லோ ஆஸ்பிட்டலில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு எனக்கு கிட்னி ஆபரேஷன் நடைபெற்றது. 2023 பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனேன்.
நான் மேற்கொண்ட இரண்டு சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைம் நம்பர் கொடுத்துவிட்டனர். முதல் கிளைம் நம்பர் 32769871. இதற்கான தொகை ரூ.9,58,248. இரண்டாவது கிளைம் நம்பர் 32769913. இதன் தொகை ரூ.3,98,863. மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 111 ரூபாய்.

வெளி மாநிலத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டதால், பயனாளிகள் தங்கள் சொந்த பணத்தை செலுத்திவிட்டு, பிறகு இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்ளலாம் என்று அரசாணை உள்ளதால், நான் வட்டிக்கு கடன் வாங்கி மருத்துவமனை கட்டணத்தை செலுத்தினேன்.
இந்த கட்டணம் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய்க்கூடிய கட்டணம் மட்டும் தான். ஆனால், நான் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுக்கொண்டது, டெஸ்ட் எடுத்தது இதையெல்லாம் சேர்த்தால் 20 லட்சம் ருபாய்க்கு மேல் ஆகும்.
ஆனால், இவர்கள் அப்ரூவல் கொடுத்த ரூ.13,57,111 மட்டும் தான் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டு கடந்த இரண்டு வருடமாக போராடி வருகிறேன்.
ஒவ்வொரு முறையும் அந்த பில் வேண்டும், இந்த பில் வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து வந்தேன். ஆனால், கடைசியாக இப்போது உங்களுக்கு கிளைம் பண்ண முடியாது என்று சென்னையில் உள்ள யுனைடைட் இந்தியா தலைமை நிறுவன அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள்.
இன்சூரன்ஸ் அரசாணை 204-ல் கிட்னி ஆபரேஷன் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு கிளைம் செய்யலாம் என்று விதி இருந்தும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் எங்களைப் போன்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களையும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களையும் மோசடி செய்து வருகிறார்கள்.

இதைப் பற்றி தமிழ்நாடு அரசு கண்டுகொள்வதில்லை. கடந்த இரண்டு வருடமாக நான் பெறக்கூடிய ஓய்வூதியத்தில் பெரும் பங்கு சிகிச்சைக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருகிறேன்.
ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். இனி என்னைப் போன்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு என்னுடைய நிலை வரக்கூடாது என்று ஜனவரி 6-ஆம் தேதி தலைமை செயலகம் முன்பு என்னையே நான் மாய்த்துக்கொள்ள போகிறேன்” என்றார் கண்ணீருடன். அவரை தேற்றி தற்கொலை செய்துகொள்வது என்பது எதற்கும் தீர்வாகாது என்று அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தோம்.
இதைப் பற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் தணிக்கையாளர் வெங்கடேசன் நம்மிடம் கூறும்போது, “திமுக ஆட்சியும் யுனைடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் கூட்டு சேர்ந்து அரசு ஊழியர்களை வதைத்து வருகிறது.
அரசு ஊழியர்கள் ஊதியத்தில் இருந்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.568.80 கோடி பிடித்தம் செய்கிறது.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு 30 ஆயிரம், 50 ஆயிரம் என சிறு, சிறு ஆபரேஷன் செய்துகொண்டால் கூட அதற்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்க மறுக்கிறது.
உதாரணமாக, கண் புரை அகற்றி லென்ஸ் பொருத்த 30 ஆயிரம் இன்சூரன்ஸ் கொடுக்க அரசாணை உள்ளது. அதேபோல, பெண்களுக்கு யூட்ரெஸ் ரிமூவ் செய்ய 50 ஆயிரம் வரை கொடுக்க இன்சூரன்ஸ் உள்ளது.

அதனால் இந்த நிறுவனம் இதையே கொடுக்க மறுக்கிறார்கள். மன்றாடி போராடி பலமுறை அலைந்து திரிந்து பல ஆயிரம் செலவு செய்த பிறகு பாதி தொகை கொடுக்கிறார்கள். அதில் பலபேர் எங்கே அலைவது என்று அலுத்துபோய் இன்சூரன்ஸ் பணமே வேண்டாம் என்று வெறுத்துவிடுகிறார்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சுமார் 4 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஓய்வூதியத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.238 கோடி பிடித்தம் செய்து கொள்ளை அடிக்கிறார்கள்.
தருமபுரி சுப்பிரமணியைப் போன்ற பல ஓய்வு பெற்ற ஊழியர்கள், சிகிச்சை பெற்று இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் இன்று வரை மன உளைச்சலுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் அரசிடமும் போராடி வருகிறார்கள். அரசுக்கு எத்தனை முறை தான் கோரிக்கை வைப்பது? சுப்பிரமணியை போல பல பேர் தற்கொலை மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார் ஆதங்கத்துடன்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…