விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் – KVN நிறுவனம் எச்சரிக்கை

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Apr 2026, 5:48 PM

Vijay Jana Nayagan

விஜய்யின் ஜனநாயகன் படத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் என எந்த விதத்தில் பகிர்ந்தாலும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கே.வி.என்.தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை பிரச்சனையில் படம் சிக்கியதால் தற்போது வரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று முதலில் ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் வெளியான நிலையில், சிறிது நேரத்தில் முழு படமும் வெளியானது இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கே.வி.என்.தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கவனத்திற்கு வந்த தகவலின்படி, அடையாளம் தெரியாத சில நபர்களால் ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள், கிளிப்புகள் மற்றும் சில இடங்களில் படத்தின் பெரும்பகுதி சட்டவிரோதமாக அணுகப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. இது டிஜிட்டல் திருட்டு எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட் (Torrents) அல்லது வேறு எந்த ஊடகத்தின் மூலமாகவும் இவ்வாறு கசிந்த உள்ளடக்கத்தை தரவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பகிர்தல் அல்லது பரப்புவது ஆகியவை காப்புரிமைச் சட்டங்களின்படி கடுமையான குற்றமாகும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு டிஜிட்டல் நடவடிக்கையும் கண்காணிக்கப்படக்கூடியது. இதில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தடயவியல் ஆய்வுகள் மற்றும் புகார்கள் உட்பட தேவையான விசாரணைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். இந்த சட்டவிரோதச் சங்கிலியில் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் தீவிரமாகக் கண்டறிந்து வருகிறோம். இதில் ஈடுபடும் ஒவ்வொருவர் மீதும் விதிவிலக்கின்றி கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்தகைய கசிந்த காட்சிகளுடன் எந்த வகையிலும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட எவரும் அதன் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதோடு, உடனடி சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு இத்தகைய தகவல்கள் வந்தால், அதைத் திறக்கவோ, சேமிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம். உடனடியாக நீக்கிவிடவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel