இசையா? பாடலா? என்ற கேள்விக்கு “அண்ணா… நோ கமெண்ட்ஸ்” என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
இசையா? பாடலா?:
அண்மையில் “படிக்காத பக்கங்கள்” என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் வைரமுத்து, “இசை பெரியதா, மொழி பெரியதா என்பது தற்போது பெரிய விவாதமாகி உள்ளது.
இதில் என்ன சந்தேகம் இசை எவ்வளவு பெரியதோ அவ்வளவு மொழியும் பெரியது. மொழி எவ்வளவு பெரியதோ அந்தளவு இசையும் பெரியது. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி. புரியாதவர்கள் அஞ்ஞானி” எனத் தெரிவித்திருந்தார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து, இளையராஜாவை மறைமுகமாக சாடியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் பதில்
இந்நிலையில், இமயமலைகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக இன்று (மே 29) சென்னையில் இருந்து ரஜினி காந்த் புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “இமயமலைக்கு ஒவ்வொரு வருடமும் பயணம் மேற்கொள்கிறேன். அந்த வகையில் இந்த வருடமும் கேதார்நாத், பத்ரிநாத், பாபா கேவ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறேன்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ரஜினிகாந்திடம், இசையா? பாடலா? என்ற விவாதம் தமிழ் சினிமாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இது பற்றி உங்களது கருத்து என்ன? என்ற கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த் “ நோ கமெண்ட்ஸ்.. அண்ணா… நோ கமெண்ட்ஸ்” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டார்.
இதனிடையே, ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள கூலி படத்தின் டீசரில்’தங்கமகன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. இதற்காக கூலி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…