தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
முதலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அவரைத் தொடர்ந்து அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டுக்கு சென்றார்.
அங்கு வாசல் வரை வந்து வரவேற்றார். தனது வீட்டு வந்த விஜய்க்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து கூறினார் வைகோ.
இதையடுத்து தனது குடும்பத்தினரை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது தனது வீட்டு பணிப்பெண்களை அழைத்த வைகோ, ”இவங்களாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க” என கூற, உற்சாகத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர், கைகளை சுற்றி நெட்டி முறித்து விஜய்க்கு திருஷ்டி கழித்தனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த விஜய் தானும் அவருக்கு திருஷ்டி கழித்தார்.
இதைத்தொடர்ந்து விஜய்யிடம் பேசிய வைகோ, “உங்களுக்கு 9 வயது இருக்கும் போது நானும் கலைஞரும் உங்க புது வீட்டுக்கு வந்தோம். அதன் பிறகு விமான நிலையத்தில் ஒருமுறை என்னை வந்து சந்தித்து பேசினீர்கள்” என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
விஜய் வைகோ வீட்டுக்கு சென்ற புகைப்படமும், வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோன்று வைகோவும் தனது வீட்டு பணிப்பெண்களை அழைத்து அறிமுகப்படுத்தியதும், வெளிப்படையாக இவர்கள் விசிலுக்குதான் வாக்களித்தார்கள் என கூறியதும் பாராட்டை பெற்றுள்ளது.
தொடர்ந்து விஜய்யுடன் கைகோர்த்து வெளியே வந்த வைகோ, அவரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, இந்தத் தேர்தலில் அதிர்ச்சி தரத்தக்க ஆச்சரியங்களும் அதிசயங்களும் நடைபெறும் என்று தான் கூறியது தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான். ஆனால் அவர் இப்படி வந்து சந்திக்கக்கூடிய இந்தச் சமிக்ஞை, ஒரு ஆரோக்கியமான அரசியல் தமிழகத்திலே ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்கான சரியான சமிக்ஞை ஆகும்.
மாற்றத்தை விரும்புவதின் அடையாளம்தான் இந்தத் தேர்தல் முடிவு. அவருடைய உயர்ந்த பண்பாட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.
