விஜய் ஆட்சி எப்படி இருக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. ‘தமிழும் அறமுமே’ தமிழ் நிலத்தின் வரலாற்றை இயக்கி வந்திருக்கின்றன. இனி தமிழ்நாட்டின் வருங்காலத்தையும் வழிநடத்தப்போகின்றன.

ADVERTISEMENT

அத்தகைய மகத்தான காலத்தின் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், கழகத் தலைவர் தலைமையிலான நமது ஆட்சிக்கும் அளித்துள்ள தமிழ்நாடு மக்களைப் போற்றுகிறேன்.

‘நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துள்ளோம். அவர்கள் நமக்கான ஆட்சியைக் கொடுப்பார்கள்’ என்று தமிழ்நாடு மக்கள் வாழ்த்தி எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்காகப் பணி செய்து, உங்களைப் பெருமையடைய செய்வார்கள். அனைத்தையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான நல்வாழ்வு ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். இனி இதுபோல் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் உரிமைகளையும் நம் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.

ADVERTISEMENT

பதவியேற்ற பிறகு, சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் அளித்த ஜனநாயக அரசாட்சி உத்தரவை ஏற்றார் முதல்-அமைச்சர். பிறகு, அரசின் செயல்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

அடுத்து, நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் சென்று மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தினோம்.

பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியை முதல்-அமைச்சருடன் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். நம் கழக அரசு தந்தை பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும் என்று தெரிவித்து மகிழ்ந்தோம்.

‘ஆதவ் அர்ஜுனா எனும் நான்’ என்று தமிழ்நாடு அரசின் அமைச்சராக நேற்று நான் பதவியேற்றபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் மேன்மையையும், தமிழக மக்களான உங்களின் அன்பையுமே எனது குரலாக வெளிப்படுத்தினேன். இது, என் தனியொருவனின் குரல் அல்ல. நம் அனைவரின் கூட்டு முழக்கம்.

கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும். அறம் ஓங்கும்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share