கடல் பாதுகாப்பில் இந்தியக் கடற்படையின் பலத்தைக் கூட்டும் விதமாக, ரூ.40,000 கோடிக்கும் மேல் செலவில் 8 அதிநவீன போர்க்கப்பல்களை (Next Generation Corvettes) கட்ட மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்கான குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் இந்தியாவிலேயே கட்டப்படும்.
ரூ.40,000 கோடியில் பெரிய திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் (CCS) இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
ANI செய்தி நிறுவனத்திடம் அரசு அதிகாரிகள் சொன்ன தகவலின்படி, அடுத்த சில நாட்களில் கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் (GRSE), கோவா ஷிப்யார்டு லிமிடெட் (GSL) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
2,000 டன் எடை, 30 நாட்ஸ் வேகம்
கட்டப்படவுள்ள ஒவ்வொரு கப்பலும் சுமார் 2,000 டன் எடை இருக்கும். மணிக்கு சுமார் 30 நாட்ஸ் (கடல் மைல்) வேகத்தில் செல்லும்படி இவை வடிவமைக்கப்படுகின்றன.
இந்தியக் கடற்படையே உருவாக்கிய புதிய உள்நாட்டு ஸ்டெல்த் வடிவமைப்பின் அடிப்படையில் இந்தக் கப்பல்கள் உருவாக்கப்படும். எதிரிகளின் கண்காணிப்பில் எளிதில் சிக்காமல் இருப்பதற்கான தொழில்நுட்பங்களும் இதில் இருக்கும்.
2030-ல் முதல் கப்பல் கைக்கு வரும்
எட்டுக் கப்பல்களையும் GRSE-யும் கோவா ஷிப்யார்டும் சேர்ந்து கட்டவுள்ளன. கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து, சொன்ன நேரத்துக்கு முன்பே கப்பல்களை ஒப்படைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. முதல் போர்க்கப்பலை 2030-ம் ஆண்டுக்குள் கடற்படையிடம் ஒப்படைப்பது இலக்கு.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வலுப்படுமா?
கடலைக் கண்காணிப்பது, பாதுகாப்புப் பணிகள், எதிரிகள் நெருங்காமல் தடுப்பது, கடலோரப் பாதுகாப்பு என்று பல பணிகளுக்கு இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படையின் செயல்பாடு வலுப்படுவதோடு, நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்பதும் இதனால் ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’, ‘சாகர்’ (SAGAR) திட்டங்களுக்கும் இது கைகொடுக்கும்.









