அண்ணாமலை கொடுத்த அடுத்தடுத்த சர்ப்ரைஸ்… புதிய இயக்கத்தில் இணைந்த சுமார் 6 லட்சம் பேர்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

அண்ணாமலை இன்று (ஜூன் 5 ) தொடங்கி உள்ள வீ த லீடர்ஸ் இயக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தேசியத் தலைமை ஏற்றுக்கொண்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இன்று சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றிய அண்ணாமலை, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக “நம்ம இயக்கம் – (We The Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சாமானியர்களுக்கான மாற்று அரசியல்:

நேரலையில் பேசிய அண்ணாமலை, “தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் வாரிசு அரசியல் மற்றும் தனிநபர் வழிபாட்டு முறைக்கு (Cult Politics) முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாமானிய மக்களுக்கான, தூய்மையான அரசியல் தளத்தை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கம். தற்போதைக்கு மக்கள் இயக்கமாகத் தொடங்கப்படும் இந்த இயக்கம், உரிய பயிற்சி மற்றும் கட்டமைப்பிற்குப் பிறகு விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

அப்துல் கலாம் நன்னெறி மையம்

அரசியல் நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வரும் நோக்கில், கோவையில் ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசியல் மற்றும் நன்னெறி மையம்’ உருவாக்கப்படும். இதன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் முதல் களம் இறக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

உறுப்பினர் சேர்க்கையில் குவியும் ஆதரவு

புதிய இயக்கத்தின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இதற்கென உருவாக்கப்பட்ட wetheleaders.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கப்பட்டது.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதை தொடர்ந்து முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை ஆரம்பித்துள்ள ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பில் அவர்கள் இணைந்துள்ளனர்.

ஆன்லைன் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த இயக்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய அண்ணாமலையின் இந்த அதிரடித் தொடக்கம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய முக்கோணப் போட்டிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share