உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் (High Vs Low Blood Pressure) அறிகுறிகள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன, அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
ரத்த அழுத்தம் என்பது நமது உடலில் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை எவ்வளவு வலுவாகப் பம்ப் செய்கிறது என்பதைக் காட்டும் ஒரு முக்கிய செயல்பாடாகும். இதன் சமநிலை சீர்குலையும்போது உயர் இரத்த அழுத்தம் (Hypertension) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (ஹைப்போடென்ஷன்) என இரண்டு நிலைகள் ஏற்படுகின்றன. இவை இரண்டுமே உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதே சமயம் உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் விளைவுகள் வேறுபட்டவை.
உயர் இரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் இயல்பான அளவை (120/80) என்ற அளவைத் தாண்டி தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாகும். தலைவலி, தலைச்சுற்றல், மங்கலான பார்வை, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் (High blood pressure) அறிகுறிகளாக இருக்கலாம். சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தம் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவது இல்லை. ஆகவே, உயர் ரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி என்று கூட அழைக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி?
உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது நாள்தோறூம் 30 – 40 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை தவிர்க்க (Avoid stress) வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே, இரண்டையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
குறைந்த ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் மிகவும் குறையும்போது (90/60), அது குறைந்த ரத்த அழுத்தம் (Low blood pressure) என்றே அழைக்கப்படுகிறது. பலவீனம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம், கண்களுக்கு முன் கருவளையம் உள்ளிட்டவை குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக உள்ளன. குறைந்த ரத்த அழுத்தத்தை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சமச்சீரான அளவு உப்பு மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எழும்போது திடீரென்று எழாமல் மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.
எது மிகவும் ஆபத்தானது?
உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் என இரண்டுமே ஆபத்தானவைதான். ஆனால், உயர்இரத்த அழுத்தம் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் நீண்ட காலத்திற்கு உடல் உறுப்புகளை தொடர்ந்து சேதப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் இதய நோய்(heart disease), பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதே சமயம் குறைந்த இரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்தால், குறிப்பாக ஒருவர் மயக்கமடைந்தாலோ அல்லது உடலுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தாலோ அது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
பொதுவான ஆலோசனை
உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை தவிர்க்க சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். போதுமான அளவு உறங்க வேண்டும்.
உடல் எடையைப் பராமரித்துக் (weight management) கொள்ள வேண்டும். இவற்றுடன் தவறாமல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
