வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக பிரமுகர் ஞானவேலு சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூவரசன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேலுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞானவேலுவுக்கும் பூவரசனுக்கும் நேற்று (நவ. 9) ஏற்பட்ட தகராறின்போது, நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலு சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடன் இருந்த ரகு என்பவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பூவரசன் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
இந்தக் கொலை வழக்கில் பூவரசனை தேடி வந்த நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த பூவரசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.









