மீண்டும் ஒரு நடுவர் மன்றம் ஏன்?- வெளிநடப்பு செய்த ஈபிஎஸ் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay EPS

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி எண் 110 – கீழ் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பேசுவதற்கு முன்பாக நாங்கள் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சபாநாயகர் பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறிய நிலையில் அதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே அமைச்சர் அரசு தரப்பு விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழக அரசு விதிகளுக்குப் புறம்பாக, முதலமைச்சரின் பதிலுரையில் ஒரு திருத்தத்தை இடைச்செருகலாகத் தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டமன்ற விதிகளின்படி ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கென அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும். கடந்த 18-06-2026 அன்றே அதுகுறித்த நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில், சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று முதலமைச்சர் அந்த அரசு தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது விவாதமும் நடைபெற்றது.

ஆனால், விவாதம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையில்தான், இந்த இடைச்செருகல் திருத்தத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பானது. விதமுறைகளின்படி அவர்கள் சட்டமன்றத்தில் இந்தத் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினை எழுப்பினோம். ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்துள்ளது.

ADVERTISEMENT

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த விஷயம். காவிரி நதி என்பது தமிழகத்தின் ஜீவாதார நதி; தமிழகத்தின் ஜீவநதி. இதை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். காவிரி நதிநீரை நம்பித்தான் தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் உள்ளது.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் இதுகுறித்து ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக? உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினையைக் கொண்டு வந்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இரு பிரிவாக செயல்படும் அதிமுக

அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மீண்டும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இன்று சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share