திரைப்படத் திறனாய்வு
அ. குமரேசன்
நிச்சயமாக தமிழ் சினிமாவை ஒரு நல்ல கருப்பு கவ்விப் பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது. அண்மைக் காலமாக மனமுவந்து பார்க்கவும் மற்றவர்களும் பார்க்கப் பரிந்துரைக்கவுமான படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே.
அந்தக் கருப்பின் ஆட்டத்தில் இணைந்திருப்பது ‘டோரதி’. ஒரு மாறுபட்ட படம் என்பதாக மட்டுமே சொல்லிவிட முடியாது. மிக முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும்.
எல்லோரும் திரையரங்கிற்கு வரும் வகையில் படத்தின் கதையையோ திருப்பங்களையோ யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக ஊடகத்தளத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதற்காக மட்டுமல்லாமல், எதிர்பாராத திருப்பங்களின் அதிர்வுகளையும் அவற்றைத் தொடரும் உணர்வுகளையும் எல்லோரும் பெற வேண்டும் – அதற்காகவும் கதையோட்டத்தைச் சொல்வது இங்கே தவிர்க்கப்படுகிறது. ஆர்வக்கோளாறு காரணமாக அறியாமலும், படத்தின் செய்தியைச் செரித்துக்கொள்ள இயலாமை காரணமாக வேண்டுமென்றேயும் பலர் கதையைக் கிட்டத்தட்ட முழுதாகச் சொல்லிவிட்டார்கள்.

அவற்றைப் படித்துத் தெரிந்துகொண்டவர்களும் அரங்குகளுக்கு வருகிறார்கள், கண் கலங்கியும் மனம் உருகியும் பார்க்கிறார்கள். வணிக வெற்றிக்கான சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட அனுசரிப்புகள் செய்யப்பட்டிருப்பினும், கதையிலும் அதன் உச்சக்கட்டச் செய்தியிலும் சமரசம் செய்துகொள்ளாத விறுவிறுப்பான கலையாக்கத்தின் வெற்றி இது.
1990களில் மதுரை வட்டாரத்தின் ஒரு கிராமம்தான் கதைக்களம். ஆனால் அதன் மனிதர்களையும் நிகழ்வுகளையும் எல்லா நாட்டின் எல்லா ஊர்களிலும் பொதுவாகக் காண முடியும். பெண்களை ஒடுக்கிவைக்கும் ஆணாதிக்க ஆணவம், அதற்கு உறையாகும் சாதிய வன்மம், இரண்டையும் தூக்கிப் பிடிக்கும் மதவாதம், அடிப்படையாக வர்க்க பேதம் — இவை எந்த ஊரில் இல்லை?
பள்ளிக் கூடத்தில் சிறுவன் கார்த்தி, சாதிப்புத்தி ஊட்டி வளர்க்கப்பட்ட மற்ற சில மாணவர்களால் தாக்கப்படுகிறான். அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுகிறான் புரூஸ் லீ ரசிகனான சிறுவன் சுப்பு. தனது இடத்துக்கும் அழைத்து வருகிறான். ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்ற அசூயை இருந்தாலும், கடைக்குட்டிப் பையனின் நண்பன் என்பதால் கார்த்தியை வீட்டுக்குள் அனுமதிக்கிறார்கள் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தாத்தனும், ரவுடித்தனம் செய்யும் அண்ணனும்.

“அவங்க நல்லவங்களா கெட்டவங்களா” என்று கார்த்தி கேட்க, “தெரியலையேடா” என்று சுப்பு சொல்வது, அன்றைய ‘நாயகன்’ திரைப்படப் பின்னணியோடு காட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நயம்பட உரைக்கும் சித்தரிப்புகள் படம் நெடுக விரவியிருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு இன்னொன்று – ஒரு லாரி வருகிறது. தெருவோரம் நின்றுகொண்டிருக்கிற ஒரு நாயும் அதன் குட்டியும் ஒதுங்கிக்கொள்கின்றன. ஆதிக்க மேலாண்மைகளிலிருந்து எளியவர்கள் தன்னுணர்வோடு தப்பித்துக்கொள்வதன் குறியீட்டுக்காட்சியாக இதைக் கொள்ளலாம்.
ஊர்க் கிணற்றில் பிணமாக மிதக்கும் வயது முதிர்ந்த ஒரு பெண்ணின் உடல் மீட்கப்படுகிறது. அதை வேடிக்கை பார்க்கிறபோது சுப்பு சொல்கிறான், “இந்தக் கெணத்துலதான்டா என்னோட அம்மாவும் அப்பாவும் செத்து மெதந்தாங்க.” கார்த்தி அவனைத் திரும்பிப் பார்க்கிறான். சாதி ஆணவக் கொலையால் பெற்றோரை இழந்தவனைக் கார்த்தியின் அம்மா அரவணைக்கிறார்.
வன்முறைப் பயிற்சிகளோடு இருவரும் வளர்கிறார்கள். பின்னொரு கட்டத்தில் அண்ணன்காரனின் மனைவியாக வீட்டுக்கு வருகிறாள் மலையாளப் பெண் டோரதி. சுப்புவுக்கு அவளும் ஒரு தாயாகிறாள். அவர்களது நெருக்கமான பழக்கத்தை மாமனாராலும் சகிக்க முடியவில்லை, கார்த்தியாலும் கூட ஏற்க முடியவில்லை.
முன்னொரு கட்டத்தில், நண்பர்களிடையே மோதல் வரக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஊர்ப்பெரிசு ஒருவர். “நாம எதுக்காகடா மோதப் போகிறோம்,” எனக் கேட்கிறான் சுப்பு. இருவருக்குடையே டோரதியால் மோதல் வரலாம் என்று நம்மை ஊகிக்க வைக்கிறார்கள். மோதல் வருகிறது. டோரதியாலேயே வருகிறது. ஆனால் நாம் ஊகிக்கிற காரணத்தால் அல்ல. இதற்கு மேல் சொல்வது இப்படிப்பட்ட நேர்மையான ஒரு கதைப்படத்திற்குரிய நேர்மையான திறனாய்வாகாது.

ஆனால் மையச் செய்தி பற்றி விவாதிக்கலாம் – படத்தின் நோக்கமே அதுதான். “புல் பூண்டுக்குக் கூட வாழ இடம் இருக்குது.” “இந்த மரம், மலை, மேகம் எல்லாத்தையும் பாருடா.” என்று இரண்டு உரையாடல்கள் இடம் பெறுகின்றன. இயற்கையின் அந்தத் தோற்றங்களைப் போலவே மாறுபாலின அடையாளமும் இயற்கையானது. அவர்களுக்கும் பூமியில் இடம் உண்டு என்று விவரிக்காமல் உணர்த்துகிற இடங்கள் அவை.
பாலின அடையாள மாற்றம் ஏற்பட்டோரை நகைப்புக்கு உரியவர்களாகக் காட்டிய முந்தைய படங்களின் கதை முடிந்துவிட்டது. அவர்களின் வலிகளைச் சொல்கிற சில படங்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. டோரதி மாறுபடுவது எங்கே என்றால், நட்பில் தொடங்கும் பயணம் காதலில் நிறைவடைவதைச் சொல்வதில். துல்லியமாகக் கூறுவதெனில், அந்தப் பயண நிறைவைச் “சொல்வதில்” இல்லை, “காட்டுவதில்” இருக்கிறது.
அப்படிக் காட்டுவதில்தான் சுயநியமன கலாச்சாரக் காவலர்கள் கடுப்பாகியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் கரித்துக்கொட்டுகிறார்கள். தற்பாலின உறவுக்கு வேறொரு கொச்சையான சொல் இருக்கிறதே, அதைக் குறிப்பிட்டு அந்த ஒழுக்கக்கேட்டைப் படம் புனிதப்படுத்துகிறது என்கிறார்கள். தற்பாலின ஈர்ப்பே கூட இயற்கையின் ஒரு செயல்தான், அதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதற்கான வாதங்கள் ஒருபுறமிருக்க, இந்தப் படத்தில் சித்தரிக்கப்படுவது தற்பாலின ஈர்ப்பல்ல – மாறிய பாலினத்தவருடனான அன்புதான். ஆகவே இது இரு மாறுபட்ட பாலினத்தவர்களின் காதல்தான், ஏன் இதை எதிர்க்க வேண்டும்?
சிறு வயதிலும், இளமைப் பருவத்திலும் திரையரங்கில் பார்க்கும் படங்களில் வரும் உதட்டோடு உதடு சந்திக்கும் முத்தக் காட்சிகள் பற்றிய உரையாடல்கள் ஆங்காங்கே வருகின்றன. வயதுக்கே உரிய இடைக்காலக் காதல் உறவுகள் மலர்ந்தாலும் அந்த முத்தப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பு அமையாமல் போகிறது. அந்த வாய்ப்பு எப்போது அமையும் என்ற ஊகம் நமக்குள் எழுகிறது – அந்த ஊகம் சரியாக அமைகிறது. அப்போது நமக்கு, முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது என்ற வழக்கமான சினிமா விமர்சனச் சலிப்பு ஏற்படுவதில்லை, நமது அக்கறை மிகுந்த ஊகத்தின்படியே நடப்பதன், உடலியலாக அல்லாமல் உள்ளங்களின் புரிதலாவதன் சிலிர்ப்புதான் ஏற்படுகிறது.
திரையரங்கில், குடும்பமாக வந்தவர்கள் உட்படப் பலரும் எழுந்துநின்று கைதட்டுவது அந்தச் சிலிர்ப்பின் அங்கீகாரமே. இடையே ஒரு காட்சியில் கார்த்தி “தேவைப்படுவது அங்காரம்தான்” என்று பெரியவரிடம் சொல்கிறான். “அங்கீகாரம்தான்” என்று அதை அவர் திருத்துகிறார். இது வெறும் நகைச்சுவைச் சொல் விளையாட்டல்ல.

திருநர் பற்றியும் அவர்களுடனான உறவு பற்றியும் படமெடுப்பது மேற்கத்திய கலாச்சாரத் திணிப்பு என்றும் சிலர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவின் மகத்தான இலக்கியச் சொத்துகளாகிய ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ இதிகாசங்களில் வரும் திருநர் தொடர்பான கதைகளைப் பரிந்துரைக்கலாம்.
பாலின அடையாள மாற்றத்தைப் பூசைகளாலும் சடங்குகளாலும் புனிதப்படுத்தும் வேலையைப் படம் செய்வதாகவும் ஒரு குரல் காதில் விழுந்தது. உண்மை என்னவென்றால், பொதுச் சமூகம் சமமான மனிதர்களாக ஏற்கத் தவறிய நிலையில் இந்த மக்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட வழிபாட்டு முறைகளே அவை.
“பத்து வருசத்துக்கு அப்புறம் நாங்கதான் நார்மல்” என்று படத்தில் வரும் ஒரு திருநங்கை தொண்ணூறுகளின் காலச் சூழலில் கூறுகிறார். இந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு “நாங்கதான் நார்மல்” எனக்கூறும் நிலை வந்துவிடவில்லை என்றாலும், “நாங்க நார்மல்தான்” என்ற நிலையை அவர்கள் போராடிப் போராடி நிறுவியிருக்கிறார்கள்.
“ஆம்பளை அழக்கூடாது” என்று பேசிப்பேசி ஆண் திமிர் வளர்க்கப்படுவது பற்றியும் படம் பேசுகிறது. பின்னர், “பொம்பளை அழக்கூடாது” என்ற நியாயத்தையும் நிறுவுகிறது. “சாதி, மதம் இந்த வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் நாங்கள்” என்ற வசனமும் கவனத்திற்குரியது.

இவற்றை நீதிபோதனைக் கதையாக அல்லாமல் அழகும், வியப்பும், சுவையும், விறுவிறுப்பும் நான்கறக் கலந்த திரைப்படமாகத் தந்திருப்பதும் டோரதியின் தனித்துவம்தான். இங்கே திரையிடப்படுவதற்கு முன்பாகவே கனடா நாட்டின் டொரொண்டோ உலக திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்றதன் ரகசியம் இதுதான் போலும்.
திரைப்படத்தின் தூண்டுதலால் கூடுதலாகத் தெரிந்துகொள்ள சில தகவல்கள்: உலக அளவில் தோராயமாக இரண்டரைக் கோடி முதல் 5 கோடி வரையில் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மாறுபாலினத்தவர்கள் வாழ்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக வில்லியம்ஸ் நிறுவனமும் தெரிவிக்கின்றன. இவர்களைப் பதிவு செய்வதில் பல நாடுகளின் அரசாங்கங்கள் ஒரே மாதிரியான நடைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.
இந்தியாவில் அதிகாரப்பூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆண் என்றோ பெண் என்றோ குறிப்பிட மறுத்தவர்களை “மற்றவர்” (அதர்) என்று பதிவு செய்து, அதற்கான எண்ணாக 3 என்று குறிப்பிடப்பட்டு வந்தது. அவ்வகையில் 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி திருநர்களின் எண்ணிக்கை 4,87,803. தமிழ்நாட்டில் 22,364 பேர் பதிவு செய்யப்பட்டார்கள்.
ஆயினும் சமூக ஏற்பின்மை, அச்சம், தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பலர் தங்களின் அடையாளத்தை மறைத்திருக்கக்கூடும். ஆகவே உண்மை எண்ணிக்கை இந்திய அளவில் 20 லட்சத்தைத் தாண்டும் என்று பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அந்த அமைப்புகளின் மதிப்பீடு, திருநர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டோர் விவரங்களின்படி 50,000 முதல் 1,00,000 வரை இவர்களின் மக்கள்தொகை இருக்கக்கூடும். உச்சநீதிமன்றம் 2014இல் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பில் இவர்களை மூன்றாம் பாலினம் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் பிற ஆவணங்களிலும் குறிப்பிட ஆணையிட்டது.

மறுபடி படத்திற்கு வருவோம். இளையராஜா என்றுமே தனது கலையில் இளமையானவர்தான் என்று பாடல்களும் பின்னணி இசையும் பறைசாட்டுகின்றன. படத்தில் பயணமாகும் லாரியில் நம்மையும் ஏற்றி விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. கதையின் சமகால நிகழ்வுகள் பெரும்பாலானவற்றைக் கறுப்பு வெள்ளையிலும் கடந்த காலக் காட்சிகளைப் பல வண்ணங்களிலும் அமைத்திருக்கும் வழக்கத்துக்கு மாறான உத்தியுடன் நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் கணேஷ் சிவா.
நம்பிக்கையளிக்கும் இளம் நடிகர்களாக சுப்புகளையும் கார்த்திகளையும் டோரதிகளையும் உயிரோடு நம் முன் நிறுத்தியிருக்கிறார்கள் சனந்த், ரிஷிகாந்த், அவர்களோடு கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும். அந்தத் தாத்தனையும் மாறுபாலின அம்மாக்களையும் மற்றவர்களையும் நேரில் சந்திக்க வைக்கிறார்கள் முத்துக்குமார், திரைக்கு வெளியேயும் திருநங்கையரான ஜீவா, பிரியா, சுதா, வட மாநிலத்துத் திருநர் உள்ளிட்டோர்.

இரண்டு நாயகப் பாத்திரங்களுக்கும் தனது பெயரைப் பிரித்துக் கொடுத்துள்ள இயக்குநர், படத்தின் ஒவ்வொரு சட்டகத்தையும் பல ஆண்டுகள் மனதில் ஊறப்போட்டு எடுத்திருக்கிறார் என்று நன்றாகத் தெரிகிறது. சில சமூக நிலைமைகளை ஓரளவுக்கே மையமாக்கியிருந்த முந்தைய படங்களின் வணிக வெற்றி, இந்தப் படத்தின் முழுமையான துணிச்சலுக்குத் துணையாகியிருக்கிறது.
