மதிமுகவுக்கு திமுக மாஜி எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

DMK leader S.S. Sivasankar warns MDMK over political criticism

திமுகவை மதிமுகவினர் விமர்சிப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்ட வீடியோ பதிவு: மதிமுக, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து விலகியதைக் குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். யாரும் இதற்காக வருத்தப்படவில்லை; எனவே, இது குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எதையும் நாங்கள் முன்வைக்கவில்லை.

ADVERTISEMENT

இருப்பினும், மதிமுக தரப்பிலிருந்து திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்படும்போது, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம். வைகோ அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அல்லது தலைவர் கலைஞர் அவர்களின் தயவு இல்லாமலேயே வளர்ந்தார் என்று சிலர் பேசுவது தவறானது. வைகோவின் வரலாறு தெரியாமல் இன்று மதிமுகவில் இருப்பவர்கள் பேசலாம், ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் வைகோவின் வரலாறு நன்கு தெரியும்.

வைகோவுக்கு நாடாளுமன்றத்தில் இடமளித்து, அவருக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 1978 முதல் 1990 வரையான ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தொடர்ந்து அனுப்பி, அவர் பேசுவதற்கான தைரியத்தை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

ADVERTISEMENT

ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்கும் தெம்புதான் தொண்டனையும் பேச வைக்கும்; அந்தத் தெம்பைப் பெற்றுதான் வைகோ அக்காலகட்டத்தில் புகழ் பெற்றார். அதற்குப் பிறகு, அவர் மதிமுகவைத் தனித்துக் கட்சியாகத் தொடங்கினார். ஆனால், அதன் பிறகு அவர் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டும், சிவகாசி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் சிவகாசி தொகுதியில் தலைவர் கலைஞர் அவர்களே அவருக்கு வாய்ப்பளித்து நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். அதன் பின் 2019-ல் தற்போதைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களும் அவரை மேலவை உறுப்பினராக ஆக்கினார். இவ்வாறாக நான்கு முறை எந்தவிதத் தேர்தல் சிரமமும் இல்லாமல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

ADVERTISEMENT

மதிமுகவைத் தொடங்கிய பிறகு 1996 தேர்தலில், அவரே ஆட்சியைப் பிடிக்கப் போவதாகப் பெரிய அளவில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்து, மீண்டும் கலைஞர் அவர்களே முதலமைச்சரானார். வைகோவின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், திமுகவினருக்கு இவையெல்லாம் தெரியும் என்பதை மதிமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும்.

வைகோவின் வரலாற்றை நாங்கள் சொல்வதைவிட, மதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்திருக்கும் மூத்த தலைவர்களே அதற்குச் சாட்சி. வைகோ மீது போடப்பட்ட பொடா வழக்கிற்காகப் போராடியவர் கலைஞர். அக்காலத்தில் மதிமுகவின் தூண்களாக இருந்த செவந்தியப்பன், அழகு சுந்தரம், செங்குட்டுவன் போன்றவர்கள் இன்று தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

மதிமுக தொடங்கப்பட்டபோது இருந்தவர்களுக்கும், இன்று இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தாலே அதன் நிலை என்னவென்பது புரியும். வைகோவின் தொடக்க கால அரசியல் பயணத்தில், கலைஞர் மேடையில் பேசும்போது அவர் காலடியில் அமர்ந்திருந்த காட்சியை நேரடியாகப் பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதையெல்லாம் வெளிப்படுத்தத் தொடங்கினால் மதிமுகவின் மொத்த வரலாறும் முடிந்துவிடும்.

எனவே, மதிமுகவினர் கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுவிட்ட நிலையில், விஜய் படத்தை ரசித்து, மகிழ்ச்சியாக இருங்கள்; தேவையற்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share