போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கிய தமிழக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி இன்று ஜூன் 29-ந் தேதி திமுக மாணவர் அணி அறிவித்திருந்த போராட்டத்துக்கு திடீரென அனுமதி மறுத்துள்ளது.
திமுக மாணவர் அணி வெளியிட்டிருந்த அறிக்கையில், “தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜூன் 29-ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” – “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல நகரங்களில் திமுகவின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
ஆனால் இதற்கு திடீரென போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த அனுமதி மறுப்பு கடிதத்தை திமுக மாணவர் அணி மாநகர அமைப்பாளர் மதுசூதன் வாங்க மறுத்ததை தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி மறுப்பு கடிதத்தை மதுசூதனன் வீட்டில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

சென்னையில்..
திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரஞ்சித் விஜயாலயன், போராட்டத்துக்கு அனுமதி கோரி போலீசாரிடம் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், “சென்னை நகரில் பொது இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல் சட்டம் விதி 41-ன்படி குறைந்தபட்சம் ஐந்து முழு வேலை தினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், மனுதாரர் 29.06.2026 அன்று சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில், ஆர்ப்பாட்டம் நடத்த, 28.06.2026 அன்று அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். சென்னை பெருநகர காவல் சட்டம் விதி 41-ன்படி ஐந்து முழு வேலை தினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரி மனு அளிக்கப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலனை செய்ய போதிய கால அவகாசம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களினாலும், பொதுமக்கள் நலன், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தினாலும், மனுதாரர் 29.06.2026 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை, கோவை, திருப்பூரில்..
மதுரையில் நேற்று இரவு 10.30 மணிக்கும் கோவையில் நேற்று இரவு 11.33 மணிக்கு, போராட்டத்துக்கு அனுமதி இல்லை என போலீசார் கடிதம் கொடுத்தனர். திருப்பூரிலும் திமுக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் திமுக போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
