அதிமுக கட்சிகொடி.. எடப்பாடி படம் மிஸ்ஸிங்.. வழக்கத்திற்கு மாறாக நடந்த எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

SP Velumani

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுக கொடிகளோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமோ இடம்பெறாதது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 28) முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிர்வாகிளை சந்திக்கும் வகையில் கூட்டததிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் தனக்காக களப்பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ADVERTISEMENT

பொதுவாக அதிமுகவின் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சிக் கொடிகள், பிரம்மாண்ட பேனர்கள், போஸ்டர்கள் என பலத்த ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்டபத்தின் முகப்பிலோ அல்லது வெளிப்பகுதியிலோ எந்தவொரு கட்சி பேனரோ வைக்கப்படவில்லை. எஸ்.பி. வேலுமணியின் படம் தாங்கிய பேனர்கள் கூட அங்கு இல்லை. கட்சி கொடிகளும் அங்கு கட்டப்படவில்லை.

அதேபோல், மண்டபத்தின் உள்ளே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது. மேலும், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட புறநகர் மத்திய மாவட்டச் செயலாளர் செம வேலுச்சாமியும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணியிடம், நிகழ்ச்சி ஏன் இவ்வளவு எளிமையாகவும், பேனர்கள் இன்றியும் நடத்தப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தேர்தலில் இரவு, பகலாக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி கூறி, அவர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை; உள்ளே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இருக்கின்றன” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மேலும், வரும் ஜூலை 2-ஆம் தேதி தாம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் செல்ல உள்ளதாகவும், அதற்கு முன்பாக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவே இந்தச் சந்திப்பு என்றும் கூறினார். தொடர்ந்து, தமிழக முதல்வர் தமக்கு நெருக்கமானவர்களுக்கு நியமனப் பதவிகளை வழங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

தேர்தலுக்கு பின்னர் அதிமுக அரசுக்கு சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் அதிமுக கட்சி கொறாடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததும், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த சம்பவமும் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் எஸ்.பி. வேலுமணி நடத்திய கூட்டத்தில் கட்சியின் கொடியும், பொதுச்செயலாளர் படமும் தவிர்க்கப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share