சினிமாவில் கூட சண்டை போடாத சேரன் … நடுரோட்டில் இறங்கி கோபப்பட வைத்த ஹாரன்!

Published On:

| By Kumaresan M

பொதுவாக தான் நடிக்கும் சினிமாவில் கூட  சண்டை காட்சிகள் வைக்காத இயக்குநர் சேரன் திடீரென நடுரோட்டில் இறங்கி சண்டை போட்டால் எப்படி இருக்கும்?

இயக்குநர் சேரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு காரில் சென்று  கொண்டிருந்தார். பாண்டிச்சேரி தாண்டி கடலூரை நோக்கி செல்லும் போது, கங்கணாகுப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் போய் கொண்டிருந்த போது,  சேரனின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளார். அந்த தனியார் பேருந்து,  டிரிப் அவசரத்தில் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருக்க, இது சேரனுக்கு இரிடேட் ஆனது.

ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த சேரன் நடுரோட்டில்  காரை நிறுத்தி,  அதிலிருந்து இறங்கினார். பின்னர், அந்த தனியார் பஸ் டிரைவரை நோக்கி ,’ இவ்வளவு சவுண்டா ஹாரன் அடிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ரோட்டில் மத்தவங்கள்லாம் போக வேண்டாமா?’ என ஆவேசமாக கேட்டார். டிரைவரும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகரும் இயக்குநருமான சேரன் திடீரென்று சாலையில் இறங்கி சண்டை போடுவதை கண்ட மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சண்டையை பார்த்த ஒரு சிலர் போலீசுக்கும் போன் செய்தனர்.  ஆனால்,  சேரன் இது பற்றி புகார் எதுவும் கொடுக்காமல் சில நிமிடங்களில், தன் காரில் ஏறி புறப்பட்டார்.

இந்த தகவல் கடலூர் எஸ்.பி ராஜாராம் வரை சென்றது. உடனடியாக, அவர் சம்பந்தப்பட்ட பகுதி போலீசாரிடத்தில் விசாரித்தார். சேரன் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று போலீசார் அவரிடத்தில் தெரிவித்தனர். அதே நேரம், தனியார் பஸ்களின் ஹாரன் அட்ராசிட்டியால்தான் சேரன் கோபப்பட்டிருக்கிறார் என்பதையும் போலீசார் எஸ்.பியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. விடம் எஸ். பி தொடர்பு கொண்டு, தனியார் பேருந்துகளின் ஹாரன்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசியிருக்கிறார் என்று கடலூர் போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

சேரனால் ஹாரன் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் சரிதான்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-எம்.குமரேசன்

ரூ.525 கோடி நிதி மோசடி… பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share