ரூ.525 கோடி நிதி மோசடி… பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது!
ரூ. 525 கோடி வரை நிதி மோசடி செய்ததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ளார் தேவநாதன் யாதவ்.
பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
1872 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதை அடுத்து இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் போது, 525 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியதுடன், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி இருந்தது.
அதன் எதிரொலியாக தேர்தல் பரப்புரை காலத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தேவநாதனுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இருந்த அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேவநாதன் நிதி மோசடி செய்ததாகவும், அதனை தேர்தல் செலவுக்கு சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் 140க்கும் மேற்பட்டோர் தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து அவர் தேடப்பட்டு வந்த நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த தேவநாதன் யாதவ்வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அமெரிக்க தேர்தல்: டிரம்ப் உடன் கை கோர்த்த எலான் மஸ்க்- கமலா ஹாரிஸ் ரியாக்ஷன்!