தமிழகத்தில் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ம் தேதி தொடங்கி SIR பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வீடு வீடாக கணக்கிட்டு விண்ணப்பங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணிகளில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பூர்த்தி செய்த படிவங்களை டிசம்பர் 4ம் தேதி திரும்ப பெற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று வரும் டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை சேர்க்காமலேயே SIR பணிகளை திட்டமிட்டே முன்கூட்டியே முடித்துவிட்டனர்; இதில் மிகப் பெரிய சதி உள்ளது; இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆத்தூர் தாசில்தார் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 1) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது SIR கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 11.12.2025.
நவம்பர் 4ம் தேதியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2,124 பூத்களில் கணக்கெடுப்பு படிவங்களை திரும்பப் பெறுவது, பதிவேற்றம் செய்யக் கூடிய பணிகளை 50 சதவிகித பாகங்களில் முடித்துள்ளோம். இப்போது சில பாகங்களில் வேலைகள் முடிக்கப்பட்டிருந்தாலும் கூட வெளியூர் சென்ற வாக்காளர்கள் 11ம் தேதி வரை எப்போது கொடுத்தாலும் கணக்கெடுப்பு படிவங்களை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இந்திய தேர்தல் ஆணையம் எடிட் வசதியை பயன்படுத்தி ஏற்கனவே சேர்க்கப்படாதவர்களையும் சேர்க்கலாம். அதை இன்று முதல் வாக்குசாவடி அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளோம்.
இறப்பு, நிரந்தரமாக குடிபெயர்ந்தோர், முகவரி கண்டு பிடிக்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், இரட்டை பதிவு போன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அறிவுறுத்தி உள்ளோம் என்றார். இந்த பணிக்கு பூத் ஏஜென்ட்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுகோள் வைத்துள்ளோம்.
இது போன்ற நடவடிக்கைகளின் போது வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களையும் சேர்த்து கொள்வோம் என்றார்.
இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து 5 முதல் 6 சதவிகிதம் வரை இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. 16.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை தான் வெளியிட உள்ளோம். அதற்கு பின்னரும் கூட விடுபட்ட வாக்காளர்களோ, கட்சியின் முகவர்களோ விடுபட்டவர்களிள் தகவலை கொடுத்தால் சேர்த்து கொள்ளலாம்.
அதன் பிறகு மாவட்ட தேர்தல் ஆணையரிடம் முறையிடவும், மத்திய தேர்தல் ஆணையரிடம் முறையிடவும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், ஆத்தூர் தொகுதியில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெறவில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு , ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் முடித்து விட்டோம். இன்று காலை அனைவரையும் வாங்க சொல்லி உள்ளதாக தெரிவித்தார்.
ஆத்தூர் தாசில்தார் பிஎல்ஓ களிடம் இருந்து வாக்காளர்கள் ஷிப்டிங் என படிவத்தை பூர்த்தி செய்து வாங்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, அப்படி சொல்லவில்லை பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக சொல்லி இருப்பார். அதனை மீண்டும் மறுஆய்வு செய்ய சொல்லி உள்ளோம்.
அரசியல் வேண்டாம் என மழுப்பலாக தெரிவித்தார்.
