ADVERTISEMENT

SIR முறைகேடு: ஆத்தூர் தொகுதியில் மத்திய அரசு பெரும் சதி.. மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மீது அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published On:

| By Mathi

SIR I Periyasami

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை சேர்க்காமலேயே SIR பணிகளை திட்டமிட்டே முன்கூட்டியே முடித்துவிட்டனர்; இதில் மிகப் பெரிய சதி இருக்கிறது; ஆகையால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆத்தூர் தாசில்தார் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (நவம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதல் சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

தாசில்தார் முத்துமுருகன் மீது புகார்

ஆத்தூர் தொகுதியில், தாசில்தார் முத்துமுருகன் என்பவர், ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் சென்று ஒவ்வொரு BLO-வையும் அழைத்து இனிமேல் இருக்கும் வாக்குகளை Shifted- இடம் பெயர்ந்துவிட்டார்கள் என பதிவு செய்ய சொல்லி இருக்கிறார். SIR-ஐ இன்றுடன் குளோஸ் செய்யுங்கள் என சொல்லி இருக்கிறார். அதேபோல வாக்காளர்களாக சேர வருகிறவர்களையும் இனிமேல் சேர்க்காதீங்க என்று சொல்லிவிட்டார் தாசில்தார் முத்துமுருகன்.

ADVERTISEMENT

ஒட்டுப்பட்டியில் ஒட்டுமொத்தமாக 60 பேர் நீக்கம்

ஒட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மொத்தமாக 60 வாக்காளர்களை Shifted என போடுகின்றனர். அப்ப வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு 3 பெண்கள் சென்றுள்ளனர்; ஆனால் அவர்களை சேர்க்க மறுத்துள்ளனர். இந்த புகார்தான் எனக்கு முதலில் வந்தது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் சொன்னேன்.. அப்போது, 4-ந் தேதி வரை SIR இருக்கிறது.. இப்படி மொத்தமாக Shifted என போடக் கூடாது.. என சொன்னேன்.. இதற்கு ஆட்சியர், “நாங்கள் சேர்த்துவிடுகிறோம்” என்றார்.

சின்னாளபட்டியில் 7,227 வாக்குகள் நீக்கம்

ஆனால் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 25,000 வாக்குகள். அங்கு மட்டும் 26 வாக்குச் சாவடி முகவர்களை அழைத்து, 7,227 வாக்குகளை Shifted எனப் போட்டு நேற்று இரவே SIR முடித்துவிட்டனர். இன்று ஆத்தூர் தொகுதியில் எங்கேயும் SIR பணிகள் நடைபெறவில்லை. இன்று ஒரு ஓட்டை கூட எங்கும் சேர்க்கவில்லை.

எப்படி மோசடி நடந்துள்ளது?

2016-ம் ஆண்டு தேர்தலில் சின்னாளபட்டியில் 17,000 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதற்கு பிறகு நடந்த தேர்தலிலும் 17,000-க்கும் மேல் வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், நேற்று வரை வாக்காளர் சேர்ப்பு எண்ணிக்கை 16,800 மட்டும்தான். 10 ஆண்டுகளுக்கு முன்னால் பதிவான வாக்குகளே 17,000-க்கும் மேல். இது ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. இது ஒரு உதாரணம்தான்.

அநீதி எங்காவது நடக்குமா?

இதே மாதிரி பார்த்தால் எல்லா வாக்குச் சாவடிகளிலும் BLO-க்களை கட்டாயப்படுத்தி வற்புறுத்தி கையெழுத்து வாங்கி உள்ளனர். இதனால் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 21,800 வாக்குகளை Shifted என பதிவு செய்துவிட்டனர். அப்படி என்றால் இந்த வாக்காளர்கள் அந்த ஊரில் இல்லை; இடம்பெயர்ந்துவிட்டனர் என அர்த்தம். இவ்வளவு பெரிய அநீதி எங்காவது நடக்குமா?

21,800 வாக்குகளை நீக்கிய ஆட்சியர், தாசில்தார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் தாசில்தாரும் சேர்ந்து திட்டமிட்டு ஆத்தூர் தொகுதியில் 21,800 வாக்காளர்களை Shifted என பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியர் மீது நடவடிக்கை எடுங்க..

தற்போது SIR காலக்கெடுவை டிசம்பர் 11-ந் தேதி வரை நீட்டித்துள்ளனர். இப்போது shifted என போடப்பட்ட வாக்காளர்களை எப்படி சேர்ப்பது? ஆகையால் ஆட்சியர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மறுசேர்க்கை நடத்துங்க..

ஒவ்வொரு வார்டிலும் 200, 250, 300 வாக்காளர்களை அங்கே இருக்கிற BL0-க்களை Shifted என போட்டுவிட்டு பதிவு செய்யக் கூடாது என சொல்லி இருக்கின்றனர். எல்லா ஊரிலும் நீங்கள் விசாரிச்சு பாருங்க.. எவ்வளவு Shifted போட்டிருக்காங்க என்று.. இவ்வளவு பெரிய தவறு தமிழ்நாட்டில் எங்கேயும் நடந்திருக்காது. ஆகையால் உடனே தேர்தல் ஆணையம் தலையிட்டு இதனை மறு ஆய்வு செய்து சின்னாளப்பட்டி பேரூராட்சியில் மறுசேர்க்கை நடத்திட வேண்டும். எல்லா வாக்குச் சாவடிகளிலும் இதேபோல மறுசேர்க்கை நடத்த வேண்டும்.

மத்திய அரசு சொல்லுச்சா? பெரிய சதி..

SIR-ஐ நேற்று முடிப்பதற்கு இந்த கலெக்டரும் தாசில்தாரும் யாரு? எப்படி இப்படி செஞ்சாங்க? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? மத்திய அரசு எதுவும் சொல்லுச்சா? ஏதோ ஒரு காரணம் இருக்கு.. சதி இருக்கு.. ஆத்தூர் தொகுதியில் மட்டும் இதை செஞ்சிருக்காங்க எனில் பெரிய சதி இருக்கு.. ஒரு பேரூராட்சியில் 7,227 பேரை நீக்கி இருக்காங்க.. அந்த பட்டியலையே உங்க கையில் கொடுக்கிறேன்.. இவ்வளவு பெரிய அக்கிரமம் நடந்துருக்கு.. இதை மறு ஆய்வு செய்யனும். திருப்பி வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

சின்னாளபட்டி முழுவதும் வியாபாரிகள்; வெளியூர்களுக்கு சென்று வியாபாரம் செய்வார்கள். அவர்கள் பொறுத்திருந்து சேரலாம் என வந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். ஏனெனில் SIR பணிகளை முடித்துவிட்டார்கள். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share