பொதுமக்களை ‘தெருநாய்களுடன்’ நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) ஒப்பிட்டு பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
தாம் அரசியலுக்கு வருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பதாக அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதனையடுத்து சென்னையில் இன்று ஜூன் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், தாம் அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பொதுமக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு ராகவா லாரன்ஸ் பேசியதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.
இன்றைய சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) அளித்த பதிலும்:
கேள்வி: தவெக ஆட்சி அமைந்து ஒரு மாசம் கடந்திருக்கு, முடிச்சிருக்காங்க. அவங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்குன்னு பார்க்குறீங்க? எப்படி மதிப்பீடு செய்றீங்க?
ராகவா லாரன்ஸ்: இந்த ஒரு மாசமா நான் பார்த்துட்டுதான் சார் இருக்கேன். இந்த அரசு வந்து என்ன பண்றாங்க, அவங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்குன்னுதான் உங்களுடைய கேள்வி. என்னை பொறுத்தவரைக்கும் ரொம்ப நல்லா இருக்கு, சூப்பராவே இருக்குன்னு சொல்லலாம்.
அதுக்கு முக்கியமான காரணம் என்னன்னா, ஒரு விஷயம் என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுச்சு.
கோவில் முன்னாடி இருக்கிற மதுக்கடையை மூடுறது, ஸ்கூலுக்கு முன்னாடி மதுக்கடையை மூடுறது.. எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அப்புறம் கல்வித்துறை அமைச்சர், அவருடைய நடவடிக்கை, அப்புறம் அறநிலையத்துறை அமைச்சர், அவருடைய நடவடிக்கை, இதெல்லாம் வீடியோவுல பார்க்குறேன். உங்கள மாதிரிதான் நானும் பார்த்துட்டு இருக்கேன்.
சோ, அவங்களுக்கு கொஞ்சம் டைம் கூட தேவைப்படுது சார்.
இப்ப நம்ம ஒரு புதிய ஏரியால போய் நம்ம ஒரு வாடகை வீட்டுக்கு போறோம்னு வச்சுக்கோங்களேன், அந்த வாடகை வீட்டுக்கு போன உடனே வீடு பார்க்கும்போது நல்லா இருக்கும் சார். ஓனர் ‘கீ’ குடுப்பாரு. வீட்டுக்குள்ள போனாதான் எங்க பைப் சரியில்லை, எங்க ஃபேன் சுத்துல, எந்த இடத்துல வந்து பெயிண்ட் அடிச்சு கொட்டுது, உள்ள போனாதான் பெருசா சார் தெரியும் நம்மளுக்கு.
ரோட்ல இருக்கிற தெருநாய் கூட நம்மள பார்த்தா கத்தும். யாரு இது புது ஆளு வந்திருக்காங்க அப்படின்னு. அந்த தெருநாய் இருக்குல்ல, அதுக்கு புடிச்ச பிஸ்கட் போடணும். ஒரு சில தெருநாய்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணிதான் சாப்பிடும், நான்வெஜ் தான் சாப்பிடும். அதுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு, அதைப் போட்டு, அது நம்மள கத்தாம பார்த்தணும்.
ஒரு நாய்க்கோ ஒரு வீட்டுக்கே இவ்வளவு ஆகுதுன்னா, ஒரு நாட்டை கொடுத்து இருக்கீங்க, கொஞ்சமாவது டைம் கொடுங்க. பாசிட்டிவா திங்க் பண்ணுங்க. புதுசா அரசு வேணும், அரசு வேணும், மாற்றம் வேணும், மாற்றம் வேணும்னு கேட்கிறீங்க. மாற்றம் வந்துடுச்சு. மாற்றத்துக்கு கொஞ்சமாவது டைம் கொடுக்க வேண்டாமா? ஒரு வாடகை வீட்டுக்கே நம்மளுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு. ஒரு அரசாங்கத்தை புதுசா கொடுத்திருக்காங்க. சோ, என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா நல்லதுன்னு நினைக்கிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.
தெருநாய்களுக்கு பிஸ்கட் போடுவதை பற்றி ராகவா லாரன்ஸ் இப்படி பேசியதுதான் பொதுமக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
