Bypolls: AIADMK Seeks BJP Support: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் தமது வேட்பாளர்களுக்கு ஆதரவு தர கோரி பாஜகவிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல மரகதம் குமரவேல் (மதுராந்தகம் (தனி), சத்தியபாமா (தாராபுரம் (தனி), ஜெயக்குமார் (பெருந்துறை) இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த கையோடு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் 7 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் வெற்றி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முடியும் வரை இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் வழக்குகள் இல்லாத தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறும்; இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (செப்டம்பர் 9) தொடங்குகிறது.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் மீண்டும் அதிமுக போட்டியிட தயாராகி வருகிறது. அதிமுகவில் நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனுக்கள் நாளை மாலை வரை வழங்கப்படும்.
இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றனர். அங்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, 2 தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தர கோரி கடிதம் அளித்தனர்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனுக்கள் பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 9
தாராபுரம், மதுராந்தகம் 2026 தேர்தல் முடிவுகள்
தாராபுரம் (தனி)
பி. சத்யபாமா – அதிமுக – 81,100 வாக்குகள் – வெற்றி
டி. இந்திராணி – திமுக – 64,373
கவுரி சித்ரா – தவெக – 46,438
திவ்யா – நாம் தமிழர் கட்சி – 6,026
வெற்றி வித்தியாசம்: 16,727 வாக்குகள்
மதுராந்தகம் (தனி)
கே. மரகதம் குமரவேல் – அதிமுக – 69,284 வாக்குகள் – வெற்றி
எழில் கேத்தரின் எழில்மலை – தவெக – 62,090
எஸ். அமுலு பொன்மலர் – திமுக – 59,838
ஜி. ஜானகிராமன் – நாம் தமிழர் கட்சி – 4,950
வெற்றி வித்தியாசம்: 7,194 வாக்குகள்
