நீட் தேர்வு அச்சம்- தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

Published On:

| By Mathi

நீட் தேர்வால் தற்கொலை

மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அச்சத்தால் சென்னையில் நேற்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடருகின்றன. இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவர் சாய் அபினவ், நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் அபினவ், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறுகையில், “ நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

ADVERTISEMENT

ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது???

குளறுபடிகளும் – மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வற்புறுத்தித் தமிழகம் ஒன்றுபட்டு குரலை வலிமையாக எழுப்ப வேண்டும். இதற்காக இனி ஒரு மாணவனின் மரணமும் நிகழக் கூடாது” என்றார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்த மாணவர்கள்

2017
அனிதா (அரியலூர்)

2018
பிரதீபா (விழுப்புரம்)
சுபஸ்ரீ (திருச்சி)
ஏஞ்சலின் (சென்னை)

2019
ரிதுஸ்ரீ (திருப்பூர்)
மோனிஷா (விழுப்புரம்)
வைஷ்யா (தஞ்சாவூர்)

2020
சுபஸ்ரீ (கோவை)
விக்னேஷ் (அரியலூர்)
ஜோதிஸ்ரீ துர்கா (மதுரை)
ஆதித்யா (தருமபுரி)
மோதிலால் (நாமக்கல்)

2021
தனுஷ் (சேலம்)
கனிமொழி (அரியலூர்)
சௌந்தர்யா (வேலூர்)

2022
நிஷாந்தி (அரியலூர்)

2023
ஜெகதீஸ்வரன் (சென்னை)

2025
தேவதர்ஷினி (செங்கல்பட்டு)
கௌதம் (சேலம்)

2026
அனு கீர்த்தனா (கோவை)
கோபிகா (சேலம்)
ரோஷினி (தருமபுரி)
வெற்றி ஆனந்தன் (கிருஷ்ணகிரி)
ஸ்ருதி லயா (திருநெல்வேலி)
சாய் அபினவ் (பல்லாவரம், சென்னை)

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share