முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் இன்று (மே 27) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இதில், 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை தொடர்பாக நடந்த போராட்டங்களில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகத் தமிழக அரசு சார்பில் 4 வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கேட்டு சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மொத்தமுள்ள 4 வழக்குகளில் இரண்டு வழக்கை ரத்து செய்தார்.
தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என்று விமர்சித்த இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து அதனை எதிர்கொள்ள சி.வி.சண்முகத்துக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் விமர்சித்துப் பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் இன்று ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா