யுத்தகால புகைப்படக்கலைஞர் அமரதாஸ்.ஒரு ஒளிப்பட ஊடகக் கலைஞராக அவர் பதிவு செய்தது ஈழ யுத்தத்தின் ரத்த அவலங்களை. இன்று இலங்கை உள்நாட்டு யுத்தம் தொடர்பாக நடைபெறும் சர்வதேச கவனிப்புகளில் ஒரு காட்சி படிமமாய் செல்வாக்குச் செலுத்துகிறது அமரதாஸின் புகைப்படங்கள்.
உங்களைப் பற்றிய அறிமுகம், பிறந்து வளர்ந்தது, உங்கள் குடும்ப பின்னணி?
ஈழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமத்தில் பிறந்தவன் நான். பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்த குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். என் முறைசாராக் கல்வி முயற்சிகளூடாகவும் சுய தேடலூடாகவும் போர்க்கால வாழ்வியலூடாகவும் நிறைய கற்றுக்கொண்டேன். கலை ரீதியில் எந்தப் பின்னணியும் இல்லாதிருந்த குடும்பப் பின்னணியிலிருந்து சிறு வயதில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். பிறகு கவிதைகள் எழுதினேன். நாடகங்கள் நடித்தேன். சிறுகதைகள் மற்றும் கலை இலக்கிய விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தேன். ஒளிப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். ‘வாழும் கணங்கள்- அமரதாஸ் ஒளிப்படங்கள் : Living Moments – Photographs of Amarathaas ‘ என்ற பெயரில் அமைந்த அந்த நூல் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒளிப்படக் கலை தொடர்பிலும் , சினிமாக் கலை தொடர்பிலும் பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள் நிகழ்த்தியிருக்கிறேன்.
வன்னி பெரு நிலம் மீதான் உங்கள் இறுதி யுத்த பயணத்தின் அனுபவம் என்ன?அந்த பயணத்தின் பெரு வலியான நாட்களை நினைவுகூர முடியுமா?
இறுதி யுத்த காலமென்பது பேரிழப்புக்களை மட்டுமல்ல, சில சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத பெருவலி கொண்ட பேரனுபவத்தையும் தந்திருக்கிறது. மிகவும் நெருக்கடிகளையும் உயிராபத்துக்களையும் கொண்ட அந்தக் கொடிய காலத்துள் ஒரு சாட்சியாக எனது மூன்றாவது கண்ணாகிய கமெரா வுடன் அலைந்து , அடிப்படையான வளங்களோ ,பொருளாதார வசதிகளோ,தொழில் நுட்ப வாய்ப்புக்களோ இல்லாத நிலையில், பற்றாக்குறைகளே மலிந்த நிலையில் இருந்து, பெருமளவிலான பதிவுகளையும் செய்திருக்கிறேன்.முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று எல்லா வலிகளையும் உணர்வுகளையும் நான் இயன்றவரை பதிவு செய்தேன்.
நடக்கும் ஒரு நிகழ்வின், அல்லது சம்பவத்தின் ஆவணங்களாக மாறி விடுகின்றன புகைப்படங்களும், காணொளிகாளும். உங்கள் புகைப்படங்கள் இனப்படுகொலைக்கான ஆவண ஆதாரங்கள் இல்லையா?
நிச்சயமாக, எனது இறுதிப் போர்க்கால ஒளிப்படங்கள், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு சிங்களப் பேரினவாத சக்திகள் நிகழ்த்திய, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாகப் பேசக்கூடியவையே.அவற்றுள் பலவும், வெவ்வேறு வழிகளில் வெளியாகியிருக்கின்றன. தமிழின அழிப்பு நடைபெறவில்லை என்று சிறிலங்கா அரசோ, இனவாத சக்திகளோ, சட்டத்தரணியோ, அரசியல் வாதியோ, ராஜதந்திரியோ, சர்வதேச அரசுகளின் தலைவர்களோ என் முன் வந்து வாதிடவே முடியாது. நான் வெறும் சடலங்களையும் அழிவுக் காட்சிகளையும் மட்டுமே படமாக்கவில்லை. மக்களின் வலிகளும் உணர்வுகளும் என் படங்களில் பெருமளவுக்கு பதிவாகியிருக்கும். அவற்றையெல்லாம் சர்வதேச அளவில் காட்சிப்படுத்தவும் நூல்களாக்கவும் எண்ணியிருக்கிறேன். இதற்கு, நல்லெண்ணமும் விரிந்த சிந்தனையும் கொண்ட தமிழினச் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். எந்த அமைப்புக்களினதோ இயக்கங்களினதோ வல்லாதிக்க சக்திகளினதோ பின்னணியும் எனக்கில்லை. எந்தக் கருத்தியலின் பிடியிலும் நானில்லை. விடுதலையுணர்வும் அற நிலைப்பாடுகளுமே என்னை வழிநடத்தும்.
இப்போது நடந்த ஐநா அமர்வில் நீங்கள் எப்படி உரையாற்றினீர்கள்.
அது பற்றிச் சொல்லுங்களேன்? ஐநா அமர்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா?
இப்போது நிகழும் சர்வதேச அரசியல் பின்னணியில் பார்த்தால் சிறிலங்கா அரசின் மூலமோ ஐ.நா மூலமோ இன அழிப்பைச் சந்தித்த தமிழினத்துக்கு நீதியான, சரியான பரிகாரம் கிடைத்துவிடப்போவதில்லை என்பது புரியும். எனினும் ஐ.நா மன்றத்தை ராஜதந்திர ரீதியில் கையாளவேண்டிய தேவை தமிழினத்திற்கு இருப்பதைத் தவிர்க்க முடியாது.என்னளவில் நான் என் புகைப்படங்கள் வழியாக அதற்காக உழைக்கிறேன்.என் இனத்திற்கு இப்படியொரு அவலம் நிகழ்ந்து, அதை நான் பதிவு செய்து, இப்படியொரு சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிற அவல நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.
உள்நாட்டு விசாரணையை தீர்வாகச் சொல்கிறது ஐநா அமர்வு. இதை மக்களும் உங்களைப் போன்றோரும் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இன்று ஈழ மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை எது?
சமகால சர்வதேச அரசியல் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, சோரம் போகாமல் அற நிலைப்பாடுகளுடன் முன்னேறக்கூடிய ராஜதந்திர அரசியல் வழிமுறைகளே தமிழினத்துக்கு அவசரமாகவும் அவசியமாகவும் இப்போ தேவைப்படுகிறது.
இன்று ஈழ மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை எது?
இன்று ஈழத்தமிழ் மக்கள் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முன் உள்ள முதன்மையான பிரச்சனையாக சொல்லக் கூடியது, இன அழிப்புக்கான சரியான நீதி கோரிய திசையில் அவர்களை உறுதியாகப் பயணிக்க விடாமல் , சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் சிறிலங்கா இனவாத சக்திகளும் சில தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களை அலைக்கழிப்பது தான்.
உங்களுக்கு திரைப்பட ஆர்வம் உண்டா? அனுபவம் உண்டா?
நிச்சயமாக எனக்கு திரைப்பட ஆர்வம் நிறையவே உண்டு. சினிமா என்பது உலகில் மிகவும் சக்தி மிக்க காட்சி ஊடகமாகத் திகழ்கிறது. ஆனால் அதில் ஈடுபடுவதென்பது சாதாரணமான காரியமல்ல. தொழில் ரீதியாகப் பார்த்தால் உலகிலேயே மிகவும் கடினமான தொழில் திரைப்படம் எடுப்பது என்று இயக்குநர் மகேந்திரன் என்னிடம் சொன்னார். இதனை அனுபவபூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். மகேந்திரன், பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பிரசன்ன விதானகே, தர்மசிறி பண்டார நாயக்க, அசோக ஹந்தகம போன்ற குறிப்பிடத்தகுந்த, பல தமிழ், சிங்கள சினிமாக் கலைஞர்களோடு நன்கு பழகியும், சில சந்தர்ப்பங்களில் இணைந்து பணியாற்றியும் இருக்கிறேன். வன்னிப்பகுதியில் நண்பர்களைத் திரட்டி, அப்போது யாருக்கும் கிடைக்க முடியாதிருந்த பல நல்ல திரைப்படங்களைத் தேடி எடுத்து, காட்சிப்படுத்தி அதுசார்ந்த கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறேன். என் சுய தேடலில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தான் எனது கலைகளுக்கான, வெளிப்பாடுகளுக்கான வலுவான ஊட்டம் கிடைக்கும்.அசலான ஈழ சினிமா என்று சர்வதேச அரங்கில் பெருமையோடு முன் நிறுத்தக் கூடிய முயற்சிகள் மிகவும் அரிது.
நம்பிக்கை தரும் படைப்பாளியான உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?
காலம் என்னை லைக்கழிக்காமலிருக்குமென்றால் அதிகமதிகம் எனக்குப் பிடித்த கலைகளோடுதான் என் காலத்தைக் கொண்டாடுவேன். திரைப்படம் எடுப்பதும் விவரணப்படங்களை உருவாக்குவதுமே என் விருப்பம்.உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும் அதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இவற்றையெல்லாம் சாதிக்கப் பொருளாதார ரீதியிலான பலமான நிலைக்கு வரவேண்டும். பார்த்தீர்களா எங்கு போனாலும் எப்படியிருந்தாலும் இப்போதைக்கு நிம்மதியாக, அமைதியாக இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.









